Skip to main content

ஸ்ரீரங்கம் - 3

போன பதிவில் சங்க காலத்தில் ஸ்ரீரங்கம் பற்றி சில குறிப்புகளைப் பார்த்தோம். இந்தப் பதிவில் சில வரலாற்றுச் செய்திகளைப் பார்த்துவிட்டு பிற்பாடு வந்த ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். வரலாற்றைப் பார்த்தால் சோழ அரசர்களின் ஆதிக்கம் கி.பி.4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு வரை தான் நிலைத்தது. பிறகு சேர, சோழ, பாண்டியர்கள் கலப்பிரர்கள் என்ற பழங்குடி இனத்தவரால் வீழ்த்தப்பட்டனர். 6-ஆம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டியர்களுக்கு இது இருண்ட காலமாகவே இருந்தது. அதன் பின் 6-ஆம் நூற்றாண்டில் தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் ஆட்சியை நிலை நாட்டினார்கள். கி.பி.575-ல் பல்லவ அரசன் சிம்மவர்மன் காஞ்சியை ஆண்டான். இக்காலத்தில் சோழர்கள் பல்லவ அரசர்களின் கீழ் ஆட்சி புரிந்தார்கள். பல்லவர்கள், சாலுக்கியர்கள் மற்றும் பாண்டியர்களுடன் முடிவு பெறாத சண்டையினால் வலு இழந்தனர். இதனால் சோழர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.


அரசியல் மாற்றங்கள், குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில் தான் இந்துமதம் தென் இந்தியாவில் வலுப்

பெற்று வளர்ச்சி அடைந்தது!. அப்பர், சுந்தரர், சம்பந்தர் சைவ சமயத்தை அரசர்களிடமும், மக்களிடமும் பிரசாரம் செய்தார்கள். அப்பர் மகேந்திரவர்மனை (கி.பி.600-630) ஜைனமதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார். அதே போல் பாண்டிய பராங்குச மாவர்மன் (கி.பி.670- 710) சம்பந்தரால் மதம் மாற்றப்பட்டார். தென் பகுதியில் சைவம், வைணவ இயக்கங்களால் ஜைன, புத்தமதத்தின் தாக்கம் குறைந்தது. பிற்பாடு வந்த ஆழ்வார்களின் (நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிபொடியாழ்வார், திருமங்கையாழ்வார்) பாசுரக் குறிப்புகளிருந்து ஸ்ரீரங்கம் கோயில் இக்காலத்தில் எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பதை நாம் பார்க்கலாம்.


முதலில் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி வைணவத்தில் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. அவர் ஸ்ரீரங்கத்தைப் பற்றி 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.



வட்கிலள் இறையும் மணிவண்ணா. என்னும்

வானமே நோக்கும்மை யாக்கும்,

உட்குடை யசுரர் உயிரெல்லா முண்ட

ஒருவனே. என்னுமுள் ளுருகும்,

கட்கிலீ. உன்னைக் காணுமா றருளாய்

காகுத்தா. கண்ணனே. என்னும்,

திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்.

இவள்திறத் தென்செய்திட் டாயே?


[3466]


 


[வெட்கமே இல்லாமல் என் மகள் 'மணி வண்ணா' என்று அழைக்கிறாள். வானைப் பார்த்து மயங்குகிறாள். 'ஒப்பற்றவனே, பயமுறுத்தும் அசுரக் கும்பலை அழித்தவனே!' என்று வியந்து உருகுகிறாள். கொடிகள் விளங்கும் மதிள் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ளவனே! இவளுக்கு என்ன செய்வாய்?]

 


அடுத்ததாக பெரியாழ்வார், ஆண்டாளைப் பார்க்கலாம். பெரியாழ்வார், ஆண்டாள் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெரியாழ்வாரின் இயர் பெயர் விஷ்ணுசித்தர். தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவல்லிபுத்தூரில் பிறந்தவர். இவர் பாடல்களில் பாண்டிய மன்னர் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுவதன் மூலம் இவர் அக்காலத்தவர் என்பதை நாம் அறியலாம்.


இவர் வளர்ப்பு மகள் ஆண்டாளுடைய திருப்பாவைப் பாடல்(பாடல் 13) 'வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று' என்ற வரிகளைக் கொண்டு இவர் 18-ஆம் தேதி டிசம்பர் மாதம் 731 பிறந்தவர் என்று கணிக்கப்பட்டுள்ளது (M.Raghava Iyengar- ஆழ்வார்கள் காலநிலை).



வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்

வருபுனல்காவிரித்தென்னரங்கன்

பண்டவன்செய்தகிரீடையெல்லாம்

பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்

கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்

கோவிந்தன்தன்அடியார்களாகி

எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்

இணையடிஎன்தலைமேலனவே.


[212]


 


[மகிழ்ந்து பாடும் வண்டுகள் தங்கும் சோலைகளாலும் காவிரி நதியாலும் திருவரங்கம் சூழப்பட்டது. அங்கெழுந்தருளிய அரங்கன் கண்ணனாகச் செய்த திருவிளையாடல்களைப் பட்டர்பிரான் பாடினார். இவற்றைப் பாடி ஆடும் கோவிந்தன் அடியார்கள், திசை எட்டும் தீபம் ஆவார்கள். அன்னார் திருவடிகளை அடியேன் தலைமேல் சூடுவேன்.]

 



மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,

பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,

பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,

இச்சை யுடையரே லித்தெருவே போதாரே ?


[610]


 


[மேல் மாடிகள் மாடங்கள் மதிள்கள் உள்ள திருவரங்கத்தே எழுந்தருளிய அழகிற் சிறந்த தேவரான நம் பெருமாள் மஹாபலி முன்னே வாமனனாகச் சென்று தண்ணீரைக் கையிலேந்தி பிச்சை பெற்ற குறையைத் தீர்ப்பதற்காக என் கை வளையை விரும்பினாரோ? அவர் இத்தெரு வழியே எழுந்தருளுவாரோ?]

 


ஆன்டாளை அடுத்து தொண்டரடிப்பொடியாழ்வார்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவர் இளவயதிலேயே ஸ்ரீரங்கத்துக்கு வந்தவர். கோயிலொழுகில் இவர் கோயிலுக்கு பூ, மற்றும் துளசி மாலை கட்டிக்கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்ற குறிப்பு இருக்கிறது. தொண்டரடிப்பொடியார்ழ்வார் திருப்பள்ளியெழுச்சி தமிழில் முதல் சுப்ரபாதம்.



கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்

கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த

இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே.


[917]


 


[சூரியன் கிழக்கே தோன்றி விட்டான். இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண்-பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலை போல அதிர்கிறது. அரங்கனே எழுந்திரு!]

 


அரங்கனைப் பற்றி இவர் பாடிய 'பச்சைமா மலைபோல் மேனி' என்ற பாடல் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.


ஸ்ரீரங்கத்தோடு நெருங்கிய தொடர்புடைய அடுத்த ஆழ்வார் குலசேகர ஆழ்வார். சேரநாட்டை ஆட்சிபுரிந்த அரசர். திருமாலிடம் பக்தி பெருகி அரச பதவிகளைத் துறந்தார். பெருமாள் திருமொழி என்று 105 பாடல்கள் பாடியுள்ளார். இராமாவதாரம், கிருஷ்ணாவாதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. பல வைணவத் தலங்களை தரிசனம் செய்தவர், கடைசியில் தன் மகள் சேரகுலவள்ளியுடன் ஸ்ரீரங்கத்தில் வந்து வாழ்ந்தவர். பல கோயில் திருப்பணிகள் செய்தவர்.


முதலில் திருவரங்கம் பெருமாளைக் காண விரும்பும் ஏக்கத்துடன் தொடங்குகிறார்.



இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி

இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த

அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்

அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி

திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்

கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்

கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே


[647]


 


[இருளைச் சிதறிச்செய்யும் ஒளியுடைய மணிகள் விளங்கும் நெற்றியையும் இணைத்திருவடி நிலைகளான ஆயிரம் படங்களையும் உடைய ஆதிசேஷன் நாகங்களுக்கு அரசன் ஆவான். அருள்சோதியாய் விளங்கும் அழகான இவ்வனந்தனை வெள்ளைப் படுக்கையாகக் கொண்டு பெரிய பெருமாள் திருவரங்கத்தில் கண் வளர்கிறார் அலைக்கரங்களால் காவிரி அடிவருட நீலமணி போன்ற ஒப்பற்ற அழுகுடன் விளங்கும் அவரைக் கண்களால் கண்டு வணங்கி மகிழும் நாள் எந்நாளோ?]

 


இப்படி முப்பது பாடல்களில் அரங்கனைப் பாடியுள்ளார். மேலும் கோயிலொழுகில் தன் மகள் சேரகுலவள்ளியை பெருமாள் அழகிய மணவாளனுக்கு மணமுடித்தார் என்று கூறப்படுள்ளது. இவர் வாழ்ந்த காலத்தில் மூன்றாம் பிரகாரத்தைக் கட்டினார் என்ற குறிப்பும் உள்ளது. அது இன்றும் குலசேகரத் திருவீதி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் சேரகுலவள்ளிக்கு ஒரு சன்னதியும் இருக்கிறது!


அடுத்ததாக திருப்பாணாழ்வார்: யாழிசைத்துப் பாடும் பாணர் குலத்தைச் சேர்ந்தவர், திருப்பாணாழ்வார். திருவரங்கம் கோயிலை 'நீள் மதிள் அரங்கம்' என்று கூறுவது அவருடைய பாடல்களில் உள்ள ஒரே அகச்சான்று. திருப்பாணாழ்வாரின் பாடல்களை பாடும் போது கண்ணை மூடிக்கொண்டு பாடுவது மரபு.



அமல னாதிபிரா னடியார்க்

கென்னை யாட்படுத்த

விமலன், விண்ணவர் கோன்விரை

யார்பொழில் வேங்கடவன்,

நிமலன் நின்மலன் நீதி வானவன்,

நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்

கமல பாதம்வந் தென்கண்ணி

னுள்ளன வொக்கின்றதே.


[927]


 


[நித்திய சூரிகள் தலைவனான உலக காரணன் மணம் வீசும் சோலைத் திருவேங்கடத்தில் எழுந்தருளி உள்ளான்; மிகத் தூய்மையன் ஆன அவன் என்னை அடியார்க்கும் அடிமை ஆக்கிய ஒளி வடிவினன். எனக்கு அருளுவதே தன் பேறாகக் கொள்ளும் பரமபதநாதன் நீதி உடையவன். மதிள் சூழ்ந்த திருவரங்கத்தில் உள்ள அப்பொருமாளின் திருவடித் தாமரைகள் என் கண்ணுக்கு இலக்காயின ஆயினும் அவை பழைய நிலையிலே உள்ளது.]

 


கடைசியாக திருமங்கையாழ்வார். இவர் திருவாலித் திருநகரிக்கு அருகில் உள்ள திருக்குறையலூரில் பிறந்தவர். பரமேசுவரன், நந்திவர்மன்(கி.பி. 715-775) போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை கி.பி.8-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது.



வையமுண் டாலிலை மேவு

மாயன்மணி நீண்முடி,

பைகொள் நாகத் தணையான்

பயிலுமிட மென்பரால்,

தையல் நல்லார் குழல்மா

லையும்மற்றவர் தடமுலை,

செய்ய சாந்தும் கலந்திழி

புனல்சூழ்தென் னரங்கமே


[1379]


 


[தேன் கலந்த தண்ணீர்பரப்பின் மேல் வண்டுகள் பாடவும் காவிரி நதி திருவரங்கத்தைச் சுற்றி ஓடும். வானம்வரை மணம் வீசும் சோலைகளும் இத்தலத்தைச் சூழ்ந்துள்ளன பண்டு, பூமியை அளக்க மாவலி கை நீர் ஏற்ற சக்கரக்கையன் ஆன வாமனன், இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.]

 


மேற் கூறிய ஸ்ரீரங்கம் குறிப்புக்களைப் பார்த்தால் பிற்பாடு வந்த ஆழ்வார்கள் பெரும்பாலானவர்கள்

8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியலாம். இதில் ஸ்ரீரங்கம் கோயிலின் பிரகாரங்கள் மற்றும் மதிள்கள், அதில் அசைந்தாடும் கொடிகள், மாடிகள் போன்ற குறிப்புக்கள் வியப்பை அளிக்கிறது.



Old Comments from my previous blog.


நீளமாக இருக்கிறது, நடு நடுவே பழந்தமிழ்ப் பாடல்களெல்லாம் வருகிறது என்பதால் கொஞ்சம் தயங்கித் தயங்கிதான் மூன்று பாகத்தையும் படித்து முடித்தேன். அட்டகாசமாக எழுதியிருக்கிறீர்கள். அப்பா... ஏகப்பட்ட தகவல்கள். தொடர்ந்து எழுதுங்கள்


By icarus, at Sun Jun 27, 11:31:03 PM IST  


Post by Eelanathan

ஸ்ரீரங்கத்தில் தேவதைகள் மட்டும்தான் இருக்கின்றனர் என்று நினைத்தேன்(உபயம் சுஜாதா)அதற்குப் பின்னே இவ்வளவு சுவையான வரலாறும் உண்டென்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்

Thu, Jun 24 2004 6:26


Post by srishiv

its a good update sir, and welcome for more writings...innum konjam locala ezhuthunga ennai mathiri paamararukkum puriyarathukku sir plzz... anbu srishiv...

Sun, Jun 27 2004 1:25


Post by rangarajan

How does this chronology of Alvars tie up with the traditional one.The vaishnavaites are observing birthdays of all Alvars and the proposed dates should at least agree with the star,tithi etc of the corresponding traditional birthdays especially because we have an almanac which records even birthdays of the various Mans etc.

Fri, Jul 30 2004 4:59


 

Comments