Skip to main content

ஏணி, தோணி, வாத்தியார், நார்த்தங்காய்

NaOH + H2SO4 --> Na2SO4 + H2O போன்ற சமன்பாடு (equations) இன்றும் எனக்கு சமன்படுத்த்த (balance)  தெரியாது. ஏன் என்று சொல்வதற்கு முன் கெமிஸ்டரி வாத்தியார் நட்ராஜன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.



வவீபூதி இட்டுக்கொண்டு  பார்க்க பளிச்'சென அழகாக இருப்பார். . என்னைக் கண்டால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நான் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கண்டுபிடித்துவிடுவார். விடை தெரியாத கேள்வியாகக் கேட்பார். முழிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் உடனே வெளியே அனுப்பிவிடுவார். வெளியே என்றால் ஒரேயடியாக உல்லாசமாக உலாத்தமுடியாது. வகுப்பறைக்கு வெளியே கதவின் பக்கத்தில் நின்றுகொண்டே பெருமாள் சேவை மாதிரி பாடத்தைக் கவனிக்க வேண்டும் (அல்லது கவனிப்பதுபோல் பாசாங்கு செய்யவேண்டும்). எதிர்ப்பக்க ஜன்னல் வெளிச்சத்தில் கிளார் அடிக்கும். கரும்பலகை பாதி கருப்பாகவும்,  பாதி வெளுப்பாகவும் தெரியும்.


சிவபெருமானுக்கு முன்பு நந்தி உட்கார்ந்துகொண்டு இருக்கும், நான் நடராஜனுக்கு முன் நின்றுக்கொண்டு இருப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம். நாளடைவில் ஸ்டாஃப் ரூமிலிருந்து சக வாத்தியார்கள் எட்டிப் பார்த்து, நான் வெளியே நின்றுக்கொண்டிருந்தால், "தேசிகன் வெளியே நிக்கறான், அப்ப நடராஜன் அங்கதான் இருக்கார்" என்று சொல்லும் அளவிற்கு நான் பிரபலம்.


ஒழுங்காகப் படித்தால் இவர் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடலாமே என்று அன்றன்று நடத்திய பாடத்தை அன்றைக்கே ராத்திரி 12 மணி வரை படித்துவிட்டு அடுத்த நாள் வகுப்பிற்கு வந்து,  சரியான பதிலைச் சொல்லிவிட்டாலும் சமாதானமாக மாட்டார். அப்பொழுதைக்கு உட்காரச் சொல்லிவிட்டு சிறிதுநேரம் கழித்து, திடீரென என்னைக் எழுப்பி மேலே உள்ள சமன்பாடு போன்ற ஒன்றை சொல்லி உடனே பேலன்ஸ் செய்ய சொல்லுவார். தொடர்ந்து எதிர் கட்சி உறுப்பினர் போல் வெளியேற வேண்டியிருக்கும். போகப்போக எப்படியும் வெளியே போவது நிச்சயம், இதற்கு எதற்கு மெனக்கெட்டு படிக்க வேண்டும் என்று ஆகி, கெமிஸ்டரி என்றாலே அலர்ஜியாகிவிட்டது.


போன வருஷம் சென்னை மின்சார ரயிலில் இவரைப் பார்த்தேன்.


"சார் நீங்க தானே நடராஜன்?"


"ஆமாம்" என்பது போல ஆச்சரியத்துடன் பார்த்தார். "நான் தான் தேசிகன்". அவருக்கு  நினைவு இருந்தது. இருக்காதா பின்னே?


எங்கே வேலை, எவ்வளவு குழந்தைகள் போன்ற சம்பாஷனைகள் முடிந்தபின். "சார் இங்கே உட்காருங்கள்" என்று என் சீட்டை அவருக்குக் கொடுத்துவிட்டு ரயில் கதவு பக்கத்தில் நின்று கொண்டே வந்தேன். 


எங்கள் வீட்டு வாசலிலிருந்து பக்கத்து வீட்டு ஜன்னல் தெரியும். ஜன்னல் ஓரத்தில் உயரமான ஆரஞ்சு கலர் குட்டிக்குரா பவுடர் இருக்கும். எப்போது பார்க்கும்போதும் அவர்கள் வீட்டில் யாராவது அதை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டு இருப்பார்கள். எங்கள் வீட்டிக்கு வருபவர்கள் கூட, "ஏதோ வாசனை வருகிறதே" என்பார்கள். குட்டிக்குரா வீட்டில் நிறைய செடிகொடிகள் இருக்கும். ஆடு மாடு ஏதாவது வந்தால் நான்தான் அதை விரட்ட வேண்டும். விரட்டாமல் இருக்க முடியாது - ஏன் என்றால் அந்த வீட்டில் இருந்தவர் எங்கள் தமிழ் மிஸ் - பெயர் பத்மா. நாங்கள் இல்லாத போது அவர்கள் வீட்டுக்கு ஆடு மாடு வந்திருந்தால் அடுத்த நாள் வகுப்பில் அதற்கு ஏதாவது பிரதிபலன் இருக்கும்.  சரியாக படிக்காதவர்களை  "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று திட்டுவதுண்டு. ஆனால் நாங்கள் மாடு, ஆடுகளை விரட்டவில்லை என்றால் எங்களால் படிக்க முடியாது என்ற நிலமை!


சில சமயம் குரு எட்டாம் இடத்தில் இருந்தால், அந்த வருடம் தமிழுக்கு தர்மநாதன் என்பவர் பாடம் எடுக்க வருவார். இவர் வந்தால் வகுப்பறை களைகட்டும்.


"கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!


போன்ற பாடல்களை ராகத்துடன் பாடுவார்.  டேப் ரெக்கார்டர் எடுத்துக்கொண்டு வந்து, "ஏழாம் மனிதன்" படத்தில் வந்த "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்ற பாடலை போட்டுக் காண்பித்தார். பட்டிமன்றம் ஏற்பாடு செய்வார்.  ஒரு முறை வலம்புரி ஜான் கலந்துகொண்டது நினைவு இருக்கிறது.  எட்டாவது படிக்கும் போது, இவர் பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்த, 'உத்தம புத்திரன்' படத்தில் சிவாஜி ஜன்னல் வழியாக ஒரு செடியின் கொடியை பிடித்துக்கொண்டு தாவிப் போனபோது, படச்சுருள் எரிந்துபோய் சிவாஜிக்கு பிறகு என்ன ஆயிற்று என்று தெரியாமலேயே காலேஜ் முடித்து வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். சில வருடங்களுக்கு முன் உத்தம புத்திரன் சிடி வாங்கி அதற்குப் பிறகு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொண்டேன். +1ல் விக்டோரியா மிஸ் தமிழ் எடுத்தார். இவரும், பத்மா மிஸ்ஸும் இணை பிரியா நண்பர்கள். அதனால் ஆடு மாடு ஓட்டும் தொழிற்கல்வி தொடர்ந்து கிடைத்தது. 


தமிழ் வகுப்பைக் காட்டிலும் ஆங்கில வகுப்பு மிகவும் பிடிக்கும். காரணம் ஜேசுதாஸ் வாத்தியார். எப்பவும் சிகப்பு டை கட்டிக்கொண்டு வாயில் சிகரெட்டுடன் தான் இருப்பார். சில சமயம் அவர் மாணவர்களைக் கூப்பிட்டு சிறுகதைகளை நடித்துக்காட்டச் சொல்வார். Non-detail பாடத்தில் "Twenty Short Stories" என்ற புத்தகமும் Mark Twain எழுதிய "The Adventures of Tom Sawyer" புத்தகமும் எங்களுக்குப் பாடமாக இருந்தன. எல்லாச் சிறுகதைகளும் முத்து. இன்றும் கூட அந்தச் சிறுகதைகள் எனக்கு நினைவில் இருக்கின்றன. சிறுகதையில்  இருக்கும் கதையை விட அதைச் சொன்ன விதம், நயம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி, சிறுகதைகளை எப்படிப் படிக்க வேண்டும் என்றும் சொல்லி படிக்கும் ஆர்வத்தைக் கூட்டினார். இன்றும் சிறுகதையின் மீது இருக்கும் காதலுக்கு அவரே காரணம். நான் கல்லூரியில் படிக்கும் போதே இவர் இறந்துவிட்டார்.


பத்தாவது வரை இருந்த எங்களுடைய கணக்கு வாத்தியார் பெயர் ரஷீத். வகுப்புக்கு எப்பொழுதும் 10 நிமிடங்கள் தாமதமாகத் தான் வருவார். முழங்கை வரை சாக்பீஸ் கறை இருக்கும். அடிக்கடி இரண்டு மூக்கையும் ஒன்றாக நோண்டுவார். பக்கத்தில் போனால், கைகளை நம் சட்டையில் துடைத்துவிடுவார். மற்றபடி ரொம்ப அடிக்க எல்லாம் மாட்டார். சில சமயம் கோபம் வந்தால் குறி பார்த்து சாக்பீஸால் அடிப்பார். ஆனால் அது சுவற்றில் தான் போய் விழும். ஒரு வகுப்பு 45 நிமிடம் என்றால் 30 நிமிடம் மட்டுமே பாடம் நடத்திவிட்டு, உட்கார்ந்துக்கொண்டு காந்தி மார்கெட் பக்கத்திலிருந்து வரும் மாணவர்களை அழைத்து, "நாளைக்கு வரும் போது  வாங்கிக்கொண்டு வா" என்று ஏதையாவது வாங்கிக்கொண்டு வரச்சொல்வார். பாஸ் மார்க் வாங்க இன்னும் ஒரு மார்க் தேவை என்று போய்க் கேட்டால் மூக்கை ஒரு முறை நோண்டிவிட்டு மார்க் போட்டுவிடுவார். ரஷீத் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, ஹார்ட் அட்டாக் வந்து இறந்துபோய் விட்டார் என்றும் சிலர் சொன்னார்கள்.


இவருக்கு நேர் எதிர் +1ல் வந்த இல்லியட் ராஜ் வாத்தியார். ஆறு அடிக்கும் கொஞ்சம் கூடுதலாக, ஒல்லியாக இருப்பார். இவர் பேசுவது கடைசி பெஞ்சுக்குக் கேட்காது. பொதுவாகவே வாத்தியாரைப் பார்த்தால் வயிற்றைக் கலக்கும்; இவரை பார்த்தால் வயிற்றுக்கு கீழே கலக்கும். காரணம் இவரிடம்  மாட்டிக்கொண்டால், கையை  டிரவுசருக்குள் விட்டு, அது வெளியே வந்த பிறகு அப்படியே கொத்தாகப் பிடித்து மேலே தூக்கிவிடுவார். நிறைய பேருக்கு அண்டர்வேர்  போடும் பழக்கம் உண்டானதற்கு காரனம் இது தானா என்று  எண்ணியதுண்டு. தூக்கு போட்டுக்கொள்பவர் போல் கை கால்கள் உதறும். இல்லியட் ராஜ் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை; +1, +2 மாணவர்கள் இப்போது பேண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் கவலை இல்லை.


போன முறை திருச்சிக்கு போன போது, பழைய பள்ளிக்கூடத்துக்கு சென்றிருந்தேன். புது கட்டடங்கள், புது வண்ணம் என்று எல்லாம் மாறியிருந்தது - சைக்கிள் ஸ்டாண்ட் பக்கத்தில் இருந்த அந்த ஈச்சம் மரம் மட்டும் அப்படியே வளராமல் இருந்தது.

Comments

  1. Very Good reading. Did you study in Bishop Heber?

    ReplyDelete
  2. Campion ல படிச்ச என் உடன்பிறப்பே, நான் நிமலன் ராயன். பழசல்லாம் ஞாபகம் வந்திருச்சி. நான் A செகஷேன். ஜேம்ஸ்பத்தி எழுதலேன்னு நினய்சேன். அன்வர் தெரியுமா. பாஸ்கர்.

    contact me in lnrayan@gmail.com

    ReplyDelete

Post a Comment