Skip to main content

ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள்

இன்று மாலை(செப்-23, 2015) முனைவர் ஸ்ரீ.உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமிகளை சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் அவருடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது சாஸ்தரா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ திவ்ய பிரந்தம் திருவாய்மொழி பாடத்துக்கு இவர் தான் விரிவுரையாளர்.
’நம்பிள்ளை உரைத்திரன்’ ஆய்விற்காக இவருக்கு காமராசர் பல்கலைக்கழகம் (1981) முனைவர் பட்டம் வழங்கியது. ஸ்ரீவைஷ்ணவ நூல்களை முறைப்படி பெரியோர்பால் பயின்றவர். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே.அண்ணங்கராசார்யார் ஸ்வாமியால் ”கலை இலங்கு மொழியாளர்” என்ற பாராட்டுப்பெற்றவர். பல ஸ்ரீவைஷ்ணவ நூல்களை பதிப்பித்துள்ளார்.
ஸ்ரீராமானுஜர் பற்றி பல விஷயங்கள் பேசினோம். தற்போது அவர் “ஸ்ரீரங்கத்து ராமானுஜதாசர்கள் ஒரு தொகுப்பு” என்று நமக்கு அதிகம் தெரியாத ஸ்ரீராமானுஜ தாசர்கள் பலருடைய வாழ்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதன் கையெழுத்து பிரதியை என்னிடம் ஆசையாக காண்பித்தார். முத்து முத்தாக கை எழுத்து. அச்சு அடிக்க வேண்டாம், அப்படியே நகலெடுத்தால் போதும் என்றேன்.
அழகான தமிழில் கிட்டதட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தாசர்களை பற்றி ஆய்வு செய்து, எழுதியுள்ளார். புத்தகம் இன்னும் நான்கு ஐந்து மாதங்களில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் இந்த மாதிரி அரிய புத்தகங்களை ஊக்குவிக்க வேண்டும். இராமானுஜருடைய வாழ்கை வரலாற்றை மேலும் விரிவடைய செய்யும் என்று திடமாக நம்புகிறேன். புத்தகம் வந்ததும் அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
காஷ்மீரில் இரமானுஜர் சென்றது, அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு எவ்வளவு வருஷம் யாத்திரை சென்றார் என்பது பற்றிய பேச்சு வந்த போது காஷ்மீர் பகுதியில் இராமானுஜர் சென்ற இடம் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு முறை போக வேண்டும் என்றார் துடிப்புடன்!
பிள்ளை லோகாசார்யர் நம் ஸ்ரீரங்கம் அழகியமணவாளனோடு தப்பித்து ஜோதிஷ்குடி என்ற சிற்றூரில் பரமபதம் அடைந்தார். அடுத்த மாதம் அங்கு செல்லவிருப்பதாக சொன்னார். நானும் முடிந்தால் நானும் வருகிறேன் என்றேன்.
இராமானுஜர் பிராஜக்ட் பற்றி கொஞ்சம் நேரம் பேசிய பின், இவர் எழுதிய “மன்னுபுகழ் மணவாள மாமுனிவன்” புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை எனக்கு ஒரு பிரதி வேண்டும் என்றேன். தேடி எடுத்து கையெழுத்திட்டு தந்தார். இலவச இணைப்பாக பட்டர்பிரான் ஜீயர் அருளிச்செய்த அந்திமோயாய நிஷ்டை என்ற புத்தகததையும் தந்தார்
தண்டம் சமர்பித்து ஆசிகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்தேன்

Comments