Sunday, June 4, 2017

நான் செய்த பாவம் என்னோடு போகும்...

இளையராஜா பிறந்த நாள் பதிவு ஒன்றில் இந்த வீடியோ துண்டு கிடைத்தது.


எல்லோருக்கும் தெரிந்த பாடல் “பூவே செம்பூவே…” நடுவில் வயலின் மழை நிற்கும் முன்பே ஜேசுதாஸ் சரணத்தை எடுத்துவிடுகிறார். கடைசியில் அவர் தான் தப்பாகப் பாடியதை நினைத்து “நான் செய்த பாவம் என்னோடு போகும்” என்று பாடும் இடமும் பாடலும் இனிமை. சந்தேகம் இல்லை.
இது பாவம் என்பதற்குப் பெரிய அகராதியே இருக்கிறது. சென்ற வருடம் திருப்புல்லாணி திவ்யதேசம் சென்று சேது சமுத்திரத்தில் குளித்த போது அங்கே மிதக்கும் அழுக்கு துணிகளை பார்த்த போது, இவ்வளவு பாவமா ? என்று மலைத்துப் போனேன்.
நம்மாழ்வார் ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. ஓர் யாத்திரையில் திருவனந்தபுரம் சென்ற போது அங்கே “நானும் ஒரு தொழிலாளி” என்பது போல கோயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்களிடமிருந்து தற்காலிகமாகத் துடைப்பத்தை வாங்கி சுத்தமாக இருந்த தரையை சுத்தம் செய்தோம். பாவம் போகும் என்ற நம்பிக்கையில்.

Thursday, June 1, 2017

இரண்டு சொட்டு.. இரண்டு குழந்தைகள்

சென்ற வருடம் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமியுடன் யாத்திரை சென்ற போது மதுரா, கோகுலம், பிருந்தாவன், நந்த கிராமம் என்று சுற்றிய போது என் பக்கம் இருந்த மாமியின் தோளில் இருந்த கைப்பை என்னை கவர்ந்தது. அதன் வாரில் சின்ன குஞ்சலம் மாதிரி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது.
என்னவாக இருக்கும் என்ற மண்டைக் குடைச்சல் ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன் அவர் சட்டென்று “ஏதாவது வேண்டுதலாக இருக்கும்.. மறந்துவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு” என்றார்.
“எனக்கு அப்படி தெரியலை...”
“அப்ப திருமண் பெட்டியாக இருக்கலாம்”
“மாமி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு...”
மாமி அசந்த சமயம் உற்றுப் பார்த்தேன்... குஞ்சலத்தின் உள்ளே சின்ன பாட்டில் மாதிரி ஒரு வஸ்து இருப்பது தெரிந்தது.
மீண்டும் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டேன்.
“நிறையப் புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்கிறோம்.. அதை எல்லாம் சேகரித்து வைத்துள்ளார் மாமி” என்றார். லாஜிக் உதைத்தது.
உதைப்பட்டாலும் பரவாயில்லை, மாமியையே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.
சட்டென்று கேட்டால் வேளுக்குடி ஸ்வாமியிடம் புகார் செய்துவிடுவாரோ என்ற பயத்தில்
“எங்கிருந்து வருகிறீர்கள் ?” என்று பேச்சை ஆரம்பித்தேன்
“மும்பை.. டெல்லி.. இருப்பது பாஸ்டன், யூஎஸ்”
புரியாமல் “ஓ..”என்றேன்
“நாங்க யூஎஸ் போய் 23 வருடம் ஆச்சு”
“அங்கிருந்து யாத்திரைக்கு வருகிறீர்களா ?”
“இல்லை, இல்லை மும்பைக்கு வந்தோம் டெல்லியில் ஒரு கல்யாணம் அதை முடித்துக்கொண்டு இந்த யாத்திரை”
”ஹெக்டிக் டிரிப்தான்..மாமி உங்களுக்கு”
“ஆமாம்!” என்று முகம் மலர்ந்த சமயம் ( பாட்டியை மாமி என்று அழைத்தால் ? )
“கைப்பையில் இது என்ன ?”
“ஓ அதுவா .. “ என்று உடனே திறந்து எனக்கு இரண்டு சொட்டு கொடுத்தார்.
கையில் சில்லென்று இருந்தது.
“சானிடைசர்...” இது இல்லாமல் எங்கும் செல்வதில்லை என்றார்.
வழியில் கிருஷ்ணர் விளையாடிய இடங்களில் இந்த இரண்டு குழந்தைகளை பார்த்தேன். மாமியின் இரண்டு சொட்டு சானிடைசர் தான் நினைவுக்கு வந்தது.

Thursday, May 18, 2017

பிக் டேட்டா

அலுவலகத்தில் இருந்தேன். என் பத்து வயது மகன் தொலைப்பேசினான்.
“சுப்பாண்டி காமிக்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிடு” என்றான்.
“இப்ப மீட்டிங்கில் இருக்கேன்... அப்பறம்.”
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொலைப்பேசி அழைப்பு.
“என்ன ஆர்டர் செஞ்சாச்சா?”
“ஃபிளிப் கார்ட்டில் இல்லையே...”
”ஐயோ அப்பா... கூகிளில் சுப்பாண்டி என்று தேடு... அமேசான், ஸ்னாப் டீல்... நிறைய வரும் விலையுடன்... எது சீப்போ அதை வாங்கு...”
இந்தச் சம்பவத்துக்கும் ‘பிக் டேட்டா’வுக்கும் தொடர்பு இருக்கிறது. கோயில் கல்வெட்டு பார்த்திருப்பீர்கள். அது ஒரு விதமான தகவல். நம் கணினியில், தாத்தாவின் டைரியில் இருப்பது எல்லாம் தகவல்களே.
உதாரணத்துக்கு உங்கள் தாத்தாவின் டைரியில் நான்கு என்ற குறிப்பைப் பார்க்கிறீர்கள். அது வெறும் எண். அது தகவல் ஆகாது. ஆனால் அதே தகவலுக்கு முன் வேஷ்டி என்று இருந்தால், அது சலவைக் கணக்கு என்று சுலபமாகப் புரிந்துவிடும்.

டைரியை மேலும் திருப்பினால் மீண்டும் நான்கு வேஷ்டி என்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் மாதம், தேதி, கிழமையைப் பாருங்கள். அதிலிருந்து எதாவது தகவல் கிடைக்கலாம். உதாரணமாக உங்கள் தாத்தா மாதா மாதம் திங்கட்கிழமை நான்கு வேஷ்டி சலவைக்குக் கொடுக்கிறார். அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சலவைக்காரர் வருகிறார் என்று சிலவற்றை யூகிக்கலாம்.
நான்கு என்பது டேட்டா. அது வேறு ஒன்றோடு தொடர்புப்படுத்தப்படும்போது தகவல் ஆகிறது. இதே டைரி ஆர்.கே.நகரில் கிடைத்தால்? சலவை நோட்டுக்களாக இருக்கலாம்.

Monday, May 8, 2017

பாடம் கற்றுக்கொடுத்த பத்து நூறு கண்ட பாஷ்யகாரர்

மேல்கோட்டை, ஆழ்வார் திருநகரி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் 
கடந்த ஒருவருட காலமாக உற்சவங்கள்,உபன்யாசங்கள், பஜனைகள், கருத்தரங்கங்கள், பட்டி மன்றங்கள், புத்தகங்கள், காலண்டர்கள், ஸ்டிகர்கள் சிறிய/பெரிய சிலைகள் என்று எங்கு பார்த்தாலும் ’ஸ்ரீராமானுஜர்-1000’ கொண்டாட்டமாக இருந்துக்கொண்டு இருக்கிறது. ராமானுஜர் சம்பந்தமாக எதையாவது செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எல்லோரிடமும் இருப்பதை காணமுடிந்தது. கோயிலுக்கு முன் போஸ்டர் ஒட்டினார்கள் முடியாதாவர்கள் ’வாட்ஸ் ஆப்’, ஃபேஸ்புக்கில்; தீபாவளி மலர் மாதிரி ராமானுஜர் மலர் கொண்டு வந்தார்கள், தில்லியில் ஸ்டாம்ப் ரிலீஸ்.. எல்லோரும் எதையோ ஆசையுடன் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
அடியேனுக்கு ஒரே ஆசை. அவர் அவதரித்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் கால் பதித்து ‘தான் உகந்த’ திருமேனியை தூரத்திலிருந்தாவது சேவித்துவிட்டு வர வேண்டும் என்று. ஸ்ரீபெரும்புதூரில் நண்பர்களிடம் (மே-1) சித்திரை திருவாதிரைக்கு வரலாம் என்று இருக்கிறேன் என்று பேச்சுக்கொடுத்த போது
“ஸ்வாமி தயவு செய்து வந்துவிடாதீர்கள்…” “கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கு மேல் கூட்டம் வரப்போகிறது.. நிற்கக் கூட இடம் இருக்காது...ஊர் தாங்குமா என்று தெரியவில்லை. பார்த்துக்கோங்க!” “அடுத்த வருடம் முழுக்க ஆயிரம் தான். சாவகாசமாக ஒரு திருவாதிரைக்கு வாரும்..” என்று உபதேசம் செய்தார்களே தவிர, யாரும் “ஸ்ரீராமானுஜரை வந்து சேவியுங்கள்” என்று சொல்லவில்லை.
ஸ்ரீராமானுஜர் மட்டும் “வந்துவிட்டு போ” என்றார். ஏப்ரல் -27 அன்று என் பயணத்தை தொடங்கினேன். முதலில் மேல்கோட்டை.
மேல்கோட்டை - ஏப்ரல் 27, 2017 - தமர் உகந்த திருமேனி
மேல்கோட்டை

மேல்கோட்டை கோயிலின் முகப்பு ( சில மாதங்களுக்கு முன் எடுத்தது)
’பஜ எதிராஜம்’ என்று மேல்கோட்டை, தொண்டனூர் யாத்திரை ஒன்று ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீவேளுக்குடி ஸ்வாமிகள். கலந்துகொண்டேன்.
திருநாராயணபுரம் என்ற மேல்கோட்டை எனக்கு எப்போதும் பிடித்த இடம். ஸ்ரீராமானுஜரை நமக்கு ரட்சித்து கொடுத்தவர்கள். இன்றைக்கும் அங்கே சென்றால் நம்மை பரிவுடன் விசாரிப்பார்கள். அதனால் தான் என்னவோ ஸ்ரீராமானுஜர் தன்னுடைய ஆறு கட்டளைகளில் “திருநாராயண புரத்தில் ஒரு குடிலாவது கட்டிக்கொண்டு அமைதியுடன், மனத்திருப்தியுடன் வாழ வேண்டும்” என்கிறார். அதற்கு ஏற்றார் போல் மேல்கோட்டை வெயிலுக்கு ஸ்ரீராமானுஜருக்கு வெட்டி வேர் பந்தல் அமைத்து இயற்கை முறையில் ஏ.சி அமைத்து பரிவுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.
இயற்கை ஏசி - வெட்டி வேர் பந்தல்
காலை சென்ற போது ஸ்ரீராமானுஜர் கிரந்தங்கள் ( அவர் எழுதிய நூல்கள் ) பல்லக்கில் ஏற்றி ஜீயர் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருந்த புறப்பாட்டுடன் கூட நடந்தேன். சும்மாவா சொன்னார்கள் மேல்கோட்டை ஞான மண்டபம் என்று !.
ஸ்ரீராமானுஜர் அருளிய நூல்கள் பற்றிய சிறு குறிப்பு: எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. நவரத்தினங்களாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீராமானுஜர் அருளிய கிரந்தங்கள் 
ராமானுஜர் அருளிய நூல்கள் ஸ்ரீபாஷ்யம்(1) - பிரம்ம சூத்திரத்துக்கு விளக்க உரை
கீதா பாஷ்யம்(1) - கீதைக்கு விளக்க உரை.
வேதார்த்த சங்ரஹம்(1) - உபநிஷத்துகள், புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு.
வேதாந்த தீபம் - வேதாந்த சாரம்(2) - இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது.
நித்ய க்ரந்தம்(1) - பக்தியின் பல்வேறு நிலைகளை விளக்கும் நூல்.
கத்ய த்ரயம் - சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் (3) - சரணாகதி பற்றிய நூல். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் தாயார் சேர்த்தியின் போது இதை எம்பெருமானார் அரங்கேற்றினார். கொஞ்சம் புஷ்டியான ’தமர் உகந்த’ திருமேனியை எவ்வளவு சேவித்தாலும் திகட்டாது. அன்றும் அப்படியே.
யதிராஜரின் முகபாவங்கள்
இது நாள் வரை பார்க்காத ஒன்றை அன்று
கவனித்தேன். யதிராஜரின் முகபாவங்கள். திருமஞ்சனத்துக்கு முன் ஒரு மாதிரியும், திருமஞ்சனத்தின் போது கண்களை மூடிக்கொண்டும் ( குளிக்கும் போது நாம் எப்படி கண்களை மூடிக்கொண்டு இருப்போமோ அது மாதிரி). பிறகு ஆசாரியன் திருமுடியுடன் அலங்காரமாக அட்டகாசமாக இருந்தார்.
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிரிந்து வந்த போது தொண்டனூரில் தான் முதலில் கால் பதித்தார்.
தொண்டனூரில் புதிய பெரிய ராமானுஜர்
தொண்டனூர் சென்று அங்கே நம்பி நாராயணன், வேணுகோபாலனை சேவிக்கும் போது, இந்த இரண்டு கோயில்களிலும் யதிராஜரின் அர்ச்சா மூர்த்திகள் (அங்கும்) இருப்பதைக் கண்டேன். தொண்டனூரில் புதிய ராமானுஜர் விக்ரஹம் ( பெரிய ) பிரதிஷ்டை செய்துள்ளார்கள்( சூரியனும் மேக கூட்டங்களும் பின்னாடி வர காத்திருந்து ஒரு படம் எடுத்தேன்)
தொண்டனூர் ஸ்ரீராமானுஜர்
ஸ்ரீராமானுஜர் 1000 முகம் கொண்ட ஆதிசேஷன் உருவத்தை எடுத்துக்கொண்டு, ஒரே சமயத்தில் 1000 சமண மதத்து அறிஞர்களை வென்ற இடத்தில் ஆசாரியனையும், புதிதாக ஏரி பக்கம் பிரதிஷ்டை செய்த பெரிய ராமானுஜரையும் சேவித்தது திருப்தியாக இருந்தது.
இரவு உடையவர் புறப்பாட்டுக்கு சென்ற போது அவர் ஆசாரியன் திருமுடியுடன் வலம் வந்தார். அவருக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு மறு நாள் ஸ்ரீரங்கம் கிளம்பினேன்.


ஸ்ரீரங்கம் - ஏப்ரல் 29, 2017 - தானான திருமேனி ஸ்ரீரங்கத்துக்கு செல்லும் முன் உறையூர் என்ற திருக்கோழியூர் திவ்யதேசத்துக்கு சென்றேன். கோயில் வாசலில் பெயருக்கு ஏற்றார் போல இரண்டு கோழி ( சேவல் ) சண்டை போட்டுக்கொண்டு இருந்தது. இந்த திவ்ய தேசத்தின் மீது எனக்கு எப்போதும் ஒரு அபிமானம் - ஸ்ரீராமானுஜர் சம்பந்தப்பட்ட சில அந்தரங்க அனுபவங்கள் இந்த திவ்யதேசத்தில் அடியேனுக்கு உண்டு.
திருக்கோழியூர்!
பயணம் இனிதே நிறைவேற கமலவல்லி நாச்சியாரை ( அழகிய மணவாளனுக்கு எப்போதும் இந்த நாச்சியார் மீது ஒரு சாப்ட் கார்னர் உண்டு ) சேவித்துவிட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தேன்.
ஸ்ரீராமானுஜர் பல திவ்யதேசங்களுக்கு சென்றிருந்தாலும், அவர் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தது ஸ்ரீரங்கத்தில் தான். ஸ்ரீபெரும்புதூர்/காஞ்சி அவருடைய பிறந்த வீடு என்றால், ஸ்ரீரங்கம் அவர் புக்ககம் என்று கொள்ளலாம். ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். கோயிலில் பல சீர்த்திருத்தங்களை செய்து ”ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்று இன்றும் அதை நாம் அதை போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமானுஜரை எதிர் கொண்டு அழைத்து ‘உடையவர்’ என்ற திருநாமம் கிடைத்த இடம். தமிழ் நாடு அறநிலையத் துறை மற்றும் கிஞ்சித்காரம் டிரஸ்ட் வேளுக்குடி ஸ்வாமி அவர்கள் ”ஸ்ரீராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்ற தலைப்பில் ஒரு நாள் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஸ்ரீவேளுக்குடி அவர்களின் உபன்யாசம் வழக்கம் போல் பிரமாதம். கோவையிலிருந்து வந்த மாதவ ராமாநுஜ தாஸர் குழுவினர் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாற்றிலிருந்து, கூரத்தாழ்வானுக்கு கண் போன நிகழ்வை கண்முன்னே கொண்டு வந்து கண்களை கலங்க வைத்தார்கள். ஆயிரம் கால் மண்டபம் பல விசேஷங்களை கொண்டது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக நம் பெருமாள் ஆழ்வார்கள், புடைசூழ வீற்றிருக்கும் மண்டபம். எதிரே உடையவர் தானான திருமேனி சன்னதி. இந்த இடத்தில் ஸ்ரீராமானுஜர் 1000க்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்களுடன் ஸ்வாமியின் உபன்யாசம், நாடகம், ஒலி/ஒளி காட்சிகள் என்று உடையவரை மட்டும் அனுபவிக்க செய்தார்கள்.
ஸ்ரீரமானுஜர் பரமபதித்த பின்பு அவர் ஸ்ரீரங்கத்திலேயே அதுவும் கோயிலுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக பெரியபெருமாள் தம்முடைய வசந்த மண்டபத்தையே கொடுத்து அங்கேயே அவருடைய சரம திருமேனியை திருப்பள்ளிப்படுத்த நியமித்தார். ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளிப்படுத்தப் பெற்ற இடமே தற்போது உடையவர் சன்னதியாக இருக்கிறது. அங்கு பிரதிஷ்டை செய்யபெற்ற திருமேனிக்கு கீழே தான் அவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டுள்ளார். அங்கே பிரதிஷ்டை செய்ய பெற்ற திருமேனி அவர் உபயோகித்த வஸ்த்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டு ’தானான திருமேனி’ என்று வழங்கப்பெறுகிறது.
அடியேனை திருச்சி வானொலியில் ஸ்ரீராமானுஜர் பற்றி பத்து நிமிடம் ‘லைவாக’ பேச சொன்னது - மகிழ்ச்சி.
. உடையவர் சன்னதியில், ஸ்ரீராமானுஜரை சிறுது நேரம் சேவித்துக்கொண்டு இருந்தேன். அன்று இரவு ஆழ்வார் திருநகரிக்கு பயணமானேன்.
ஆழ்வார் திருநகரி - 30 ஏப்ரல் - பவிஷ்யதாசார்யர்
பவிஷதாசாரியார் சன்னதி முகப்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அந்த இரவிலும் ‘ஜேஜே’ என்று இருந்தது, சேலம், தஞ்சாவூர், மதுர, திண்டுக்கல் என்று கூவி கூவி அழைத்துக்கொண்டு இருந்தார்கள். எல்லா பேருந்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பேருந்தில் ஏற முற்பட்ட போது கண்டெக்டர் ‘ டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்’ மட்டும் என்று திருநெல்’வேலி’ போட்டார். ஒரே நிமிடத்தில் பஸ் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் மதுரை பஸ் ஒன்று வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டேன்.
அதிகாலை ஒன்றரை மணிக்கு மதுரையில் மல்லிகைப்பூ விற்றுக்கொண்டு இருந்தார்கள். தூக்கக்கலக்கத்துடன் அடுத்த பஸ்ஸை தேடிக்கொண்டு இருந்த போது “சார் ஜிகர்தண்டா?” என்று தூக்கத்தை கலைத்தார்.
திருச்சியில் பார்த்த அதே காட்சியை மதுரையிலும் ‘ரிப்பீட்’ செய்தார்கள். பஸ் வந்தவுடன் கைகுட்டை, துண்டு, பையை ஜன்னல் வழியாக போட்டு கூட்டம் இடம் பிடித்தது. ’நாகர்கோயில்’ பேருந்தில் சீட் பிடித்தது அதிர்ஷ்டம். ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.
“நாகர்கோயில் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள்… பைபாஸுல போகுது… திருநெல்வேலி எல்லாம் இறங்கிக்கொள்ளவும்” என்ற போது பைபாஸுக்கு தயாரானேன்.
சின்ன தம்பி பிரபு வேஷம் போட்டுக்கொண்டு சீட்டில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த சமயம், கண்டெக்டர் ஒவ்வொருவரிடமும் வந்து விசாரித்தார். திருநெல்வேலி என்று சொன்னவர்களை இறக்கிவிட்டார். என்னிடம் வந்த போது பாபநாசம் கமல் போல( பேச்சில் மட்டும் தான் ) ‘தின்னவேலி’ ஆனா நாகர்கோயில் டிக்கெட் கொடுங்க ’தின்னவேலியில இறக்கிடுங்க’

“பைபாஸ் தான் டவுன் உள்ளார போகாது இறங்குங்க”
“பரவாயில்லை.. ரோடு மேலேயே இறக்கிவிடுவே”
“நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்…” போல கண்டெக்டர் ஒன்றும் செய்ய முடியாமல் விழித்தார்.
காலை நான்கு மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து பிறகு அங்கிருந்து ஆழ்வார் திருநகரிக்கு வந்த போது விடியற்காலை ஐந்து மணி. நேராக தாமிர பரணிக்கு கிளம்பினேன்.
நீண்ட நாள் ஆசை 
இந்த ஆற்று நீரில் நீராட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஏன் என்று சொல்லுகிறேன். நம்மாழ்வார் இந்த பூவுலகில் மொத்தம் 32வருடங்களே இருந்தார். அவர் ஸ்ரீவைகுண்டம் போகும் முன் மதுரகவி ஆழ்வார் “நீங்கள் சென்றுவிட்டால் நான் யாரை ஆராதிப்பேன்?” என்றதற்கு நம்மாழ்வார் “தாமிர பரணி ஆற்று நீரை காய்ச்சும்” என்றார்.
அதை காய்ச்சிய மதுரகவி ஆழ்வாருக்கு ஓர் விக்ரஹம் கிடைத்தது ஆனால் அந்த விக்ரஹம் திரிதண்டம், அஞ்சலி முத்திரையுடன் இருக்க மதுரகவி ஆழ்வார் ”இது யார் ?” என்று வினவ அதற்கு நம்மாழ்வார் இவர் ”பவிஷ்யதாசார்யர்” என்றார். (பவிஷ்யதாசார்யர் என்றால் எதிர்கால ஆசாரியார் என்று அர்த்தம்). நம்மாழ்வார் “மீண்டும் காய்ச்சும்” என்று சொல்ல அபய அஸ்தத்துடன் நம்மாழ்வார் விக்ரஹமாக எழுந்தருளினார். திருவாய்மொழியில் ”பொலிக பொலிக” என்று ஆரம்பிக்கும் பாசுரத்தில் நம்மாழ்வார் எம்பெருமானாருடைய அவதாரத்தையே காட்டி எம்பெருமானார் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே ’பவிஷ்யதாசார்யன்’ பற்றி குறிப்பிடுகிறார்.
நாதமுனி பிரபந்தங்களை தேடிக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்கு வந்த போது மதுரகவி ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்து நாதமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற நம்மாழ்வாரை பற்றிய 11 பாசுரங்களை நம்மாழ்வார் குடிகொண்ட திருப்புளியாழ்வார் (நம்மாழ்வார் குடிகொண்ட புளிய மரம் )முன்பு 12,000 முறை சேவித்த போது, நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு ப்ரத்யக்ஷமாகி நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த விசேஷங்களையும் அருளினார்.

மீண்டும் இந்த விக்ரஹத்தை நாதமுனிகளுக்கு தந்தார். அதை நாதமுனிகள் முதல் திருக்கோட்டியூர் நம்பி வரை பாதுகாத்துத் திருவாராதனம் செய்தார்கள். பிறகு, திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பவிஷ்யதாசார்யன் சன்னதியில் திருவாராதனம் செய்தார்கள்.
பவிஷ்யதாசார்யனை பல மணி நேரம் அனுபவித்தேன். இங்கே இருக்கும் மூலவர் தொண்டனூரில் இருப்பது போல ஆதிசேஷனுடன் காட்சி அளிக்கிறார்.
ஆழ்வார் - எம்பெருமானார் ( இணைய படம் ) 
பவிஷ்யதாசார்யரையும், நம்மாழ்வாரையும் மாற்றி மாற்றி சேவித்துக்கொண்டு இருந்த போது தான் அடுத்த நாள் ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டும் என்ற நினைவுக்கு வந்தது.
நான் தங்கியிருந்த இடத்தில் ஒரு பாகவதர் பலருக்கு இட்லி, காபி, ஆட்டோ பிடித்துக்கொடுப்பது போன்ற உதவி செய்துக்கொண்டு இருந்தார். அவரிடம் நாளைக்கு சென்னை செல்ல வேண்டும் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்றேன்.
உடனே ஒரு ‘பாய்’க்கு போன் செய்தார்.
“தெரிந்த பாய் தான்… உடனே அவரை சென்று பாருங்கள்..”
ஆட்டோவில் ஏதோ சந்து பொந்தில் நுழைந்து கடைசியாக ஒரு பழைய பேப்பர் கடை வந்தது. பாய் ஓடி வந்தார்.
“சென்னைக்கு டிக்கெட் வேண்டும்”
“மூன்று நாள் லீவு பாருங்க.… டிக்கெட் எல்லாம் ரொம்ப கஷ்டம்.. ஒரு இரண்டு மணி நேரம் கழித்து பேசறேன்.. “ என்று என் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார்.
சில மணி நேரம் கழித்து பாய் ஆழ்வார் திருநகரி கோயில் வாசலுக்கு வந்து
“இந்தாங்க டிக்கெட் என்று எனக்கு SMS செய்தார்… ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் எக்ஸ்டரா” என்று பணத்தை வாங்கிக்கொண்டு சென்றார். அவருடைய நாணயம் எனக்கு பிடித்திருந்தது.
அன்று வேளுக்குடி அவர்கள் ”சமத்துவம் போற்றுவோம்” என்ற தலைப்பில் உபன்யாசம் செய்தார். மாறுபட்ட உபன்யாசமாக இருந்தது. மாதவ ராமாநுஜ தாஸர் குழுவினர் இங்கேயும் திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகளை அனுக்கார வைபவமாக கண் முன்னே கொண்டு வந்து மீண்டும் அழ வைத்தார்கள். அதில் ‘பெண் பிள்ளை’ யாக நடித்த ஸ்ரீரங்க ப்ரியா அவருடைய பெண் பிள்ளை. ( விஜய் டிவியில் http://www.hotstar.com/tv/best-of-bhakthi-thiruvizha/4249/spiritual-sojourn/1000078393 )
அன்று இரவு சென்னை பஸ்ஸுக்கு புறப்பட்டேன். எனக்கு உதவி செய்த பாகவதர்
“இருங்க சாமி ஆட்டோ வரச் சொல்றேன்..” என்று மொபைலில் ஆட்டோவை கூப்பிட்டார்.
“ரொம்ப நன்றி..சென்னைக்கு டிக்கெட் ஏற்பாடு செய்ததற்கு”
“இதுல என்ன சாமி.. நாளைக்கு ஸ்ரீபெரும்புதூரில் நல்ல தரிசனம் கிடைக்கும்.. கவலை படாம போங்க”
பாகவதற்கு நன்றி கூறிவிட்டு அவருக்கு கொஞ்சம் பணம் சன்மானமாக கொடுத்தேன்.
“எதுக்கு சாமி.. “ என்று தயங்கி பிறகு வாங்கிக்கொண்டார்.
ஆட்டோ வர நான் கிளம்பினேன். அப்போது அந்த பாகவதர் ஒரு காரியம் செய்தார்
“சாமி நான் ஆட்டோவிற்கு பணம் கொடுக்கிறேன் ?” என்று நான் அவருக்கு கொடுத்த காசை நீட்டினார்.
அசந்துவிட்டேன். நிறைய சம்பாதிக்கிறோம். ஆனால் இந்த மாதிரி தயாளகுணம் நமக்கு எப்போது வர போகிறது ?
”உங்க பேர் என்ன?”
சொன்னார்.
அவரை நினைத்துக்கொண்டு சென்னைக்கு பயணமானேன். இரவு பஸ்ஸில் ஏறியவுடன் “ஒன்றும் பிரச்சனை இல்லையே ?” என்று பாய் போன் செய்தார். கமிட்மெண்ட்!

ஸ்ரீபெரும்புதூர் - மே - 1 , 2017 - தாம் உகந்த திருமேனி ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் - ஏழ்பாரும்உ
ய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை
- உபதேச ரத்ன மாலை
ஆழ்வார்கள் திருவவதாரம் செய்த திருநக்ஷத்திரங்களை காட்டிலும் கலியிலும் நாம் உஜ்ஜீவிக்கும் படியாக செய்த எதிராசர் திருவவதாரம் செய்த சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்திரம் அன்று ஸ்ரீபெரும்புதூருக்கு வந்து சேர்ந்தேன்.
வெளியே வந்த எம்பெருமானார்
வெயில் அதிகமாக, கூட்டம் கம்மியாக இருந்தது. நிச்சயம் இளையாழ்வார் வெளியே வரும் போது பார்த்துவிடலாம் என்று நின்றுகொண்டு இருந்தேன்.
அதே போல இளையாழ்வார் வெளியே வர கண்குளிர சேவித்துக்கொண்டேன். பல இடங்களிலும் அன்னதானம், தர்பூசணி பழம், மோர் என்று கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார்கள். கொடுத்துவைத்தவர்கள் என்று நினைத்துக்கொண்டேன். எம்பெருமானார் அழகை பார்த்த போது காஞ்சிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.. ஸ்ரீரங்கம் உட்பட பல திவ்ய தேசங்களிலும் உடையவர் சன்னதியில் இருக்கும் பெருமாள் ஸ்ரீவரதன் தான். ஸ்ரீரங்கத்திலும் அவர் ஆராதனை செய்த பெருமாள் என்று வரதனை தான் சேவை செய்துவைப்பார்கள்.
கூட்டம், யானை !

ஸ்ரீராமானுஜரை பாதுகாத்து கொடுத்த பேரருளாளன்; தீர்த்த கைங்கரியம் செய்ய வைத்த பெருந்தேவி நாச்சியார்; இளையாழ்வாரைப் பார்த்து “ஆம் முதல்வன் இவன்” என்று ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷித்த கருமாணிக்க சன்னதி; அவர் சன்யாசம் மேற்கொண்ட அனந்த சரஸ் புஷ்கரணி; ஸ்ரீராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிய ஆறு வார்த்தை மண்டபம் முதலியவற்றை சேவிக்க காஞ்சிக்கு கிளம்பினேன்.
360 டிகிரியில் இளையாழ்வார் - காஞ்சிபுரம் 
நான் போன சமயம் இளையாழ்வாருக்கு திருமஞ்சனம் ஆரம்பிக்க சரியாக இருந்தது. ஸ்ரீராமானுஜரை 360 டிகிரியில் சேவித்துவிட்டு. வரதராஜ பெருமாள், பெருந்தேவி நாச்சியாருக்கு நன்றி கூறிவிட்டு ’தியாக’ மண்டபத்திலிருந்து புறப்பட்டேன். எனக்கு அழ்வார் திருநகரியிலிருந்து பல உதவிகள் செய்து, ஆட்டோ வர வைத்து, நான் கொடுத்த பணத்தையே ஆட்டோவிற்கும் கொடுக்க முன்வந்தவர் பெயர் - ’ராமானுஜன்’
ராமானுஜர் ஆயிரத்தில் அடியேன் கற்றுக்கொண்ட பாடம் பிகு : நன்றி
1. எனக்கு எப்போதும் ஸ்ரீரங்கத்தில் உதவி செய்யும் ஸ்ரீரங்கம் கேசவன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ வாசுதேவன் ஸ்வாமி, வீரராகவன் ஸ்வாமி.
2. இந்த முறை பலர்(நிஜமாகவே!) என்னை எல்லா திவ்ய தேசங்களிலும் அடையாளம் கண்டு கொண்டு முகநூல் பதிவுகளை பாராட்டி ஊக்குவித்தார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. 3. கடைசியாக என்னை ஊர் சுற்ற அனுமதித்த என் மனைவி ‘சுஜாதா’.
ஸ்பெஷல் நன்றி !
படங்கள், கட்டுரை - சுஜாதா தேசிகன்
மதுரகவியாழ்வார், அனந்தாழ்வார் திருநட்சத்திரத்துக்கு முதல் நாள் எழுதியது.
ஐந்து நாள், ஐந்து திருமேனி, 2000km. 

Wednesday, May 3, 2017

சுஜாதா என்ற வாத்தியார்

'வாத்தியார்’ என்று அன்போடு அழைக்கப்படும் என் அபினான எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பிறந்த தினம் இன்று.
படித்துவிட்டு ராக்கெட் விடலாம், பெரிய வேலையில் இருக்கலாம் அல்லது மேதாவியாக கூட ஆகியிருக்கலாம். காரணம் அவர்களுடைய பள்ளி வாத்தியார் அதே போல தான் சுஜாதா என்ற வாத்தியாரும்!
பிப் 27 அவரைப் பிரிந்த நாளில் கலைஞர் முதல் பல பிரபலங்கள் வந்தார்கள் வருத்தப்பட்டார்கள் அஞ்சலி செலுத்தினார்கள். என்னைப் போல பலர் அழுதார்கள். ஆனால் நான் வியந்த விஷயம் மயானத்தில் வேலை செய்யும் சிப்பந்தி அழுதுகொண்டு இருந்தார். அழுததற்குக் காரணம் அவரும் சுஜாதா ரசிகர் !
கலைஞர் முதல் மயானத்தில் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியன் முதல் வசிகரித்தவர் சுஜாதா அதனாலேயே அவர் எழுத்துலக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.
நான் சுஜாதாவை படித்ததே இல்லை என்று என் தலைமுறையில் யாராவது சொன்னால் அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம். இன்றும் யாராவது சுஜாதா பற்றி நல்லதோ கெட்டதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வாலி வதம் செய்தது சரியா ? தப்பா ? சீதையை ராமன் அனுப்பியது சரியா ? தப்பா ? போன்ற தலைப்புகளுடன் சுஜாதா வணிக எழுத்தாளரா, இலக்கிய எழுத்தாளரா என்ற தலைப்பும் பட்டிமன்றத்தில் சேர்ந்துவிட்டது. பலரைச் சென்றடைந்த எழுத்து இலக்கியமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?
மிஸ் யூ !
( ஓவியம் அடியேன் வரைந்தது, வாட்டர் கலர் )

Sunday, April 23, 2017

மண் சொல்லும் கதை


சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். ஆனால் சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவாலி திருநகரியில் அப்படி இல்லை. அவர்களுக்கு ஆழ்வார் என்றால் அவர் திருமங்கை மன்னன் தான்.

‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது திவ்யமாகிறது!.

ஆழ்வார்களில் திவ்யமான ஆழ்வார் யார் என்றால் அது திருமங்கை ஆழ்வார் தான். மிகப் பல திவ்ய தேசங்களுக்கும் நேரில் சென்று சேவித்து அர்ச்சாரூபமாக இருக்கும் எம்பெருமானைப் பாடிய நம் மங்கை மன்னனின் அர்ச்சாரூபத்தை திருவாலி திருநகரியில் பார்க்கும்போது  அது நிஜ ஆழ்வாராகவே “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்கத் தோன்றும்.

சில மாதங்கள் முன்பு ஸ்ரீ.உ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி அவர்கள் முகநூல் வழியாக “திவ்யமான திருமங்கை ஆழ்வார் வாழும் திவ்யதேசமான எங்கள் ஊர் வேடுபறியை தரிசிக்க வர வேண்டும்” என்று இன்பாக்ஸில் ’சிறியதிருமடல்’ அழைப்பு ஒன்றை எனக்கு அனுப்பினார்.

டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட், வெயில், அலுவலக வேலை போன்ற சால்ஜாப்புகளை பதிலாக அனுப்பினேன். ஆனாலும் அவர் விடாமல் தொலைப்பேசியில் இரண்டு முறை “எப்போது வருகிறீர்கள்?” என்று கேட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

“மயிலாடுதுரையிலிருந்து ‘மங்கை மடம்’ பேருந்தில் வாருங்கள்” என்ற அறிவுரைக்கு ஏற்றார்போல் பேருந்துக்குக் காத்துக்கொண்டிருந்த நேரம். ஆகாசத்தில் மணியோசை கேட்டது. ‘அட என்ன தெய்வீகம்!’ என்று நினைக்கும்போது “பாப்பா பாப்பா” என்ற பைரவா பாட்டு அந்த மணியோசைக்கு பிறகு ஒலிக்கத்தொடங்க, பேருந்து நிலையத்தின் டிவி முன்பு கூட்டம் கூடி கூலிங்கிளாஸ் பாட்டை ரசிக்க ஆரம்பித்தது.

எட்டு மணிக்கு பேருந்து வந்த போது, எனக்கு முன் பல வயதானவர்கள் சுறுசுறுப்பாக முதலில் ஏறிக்கொண்டார்கள். “மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ” என்று அலறிக்கொண்டு பஸ் புறப்பட்டது. என் முன் அமர்ந்திருந்த கல்லூரிப் பெண்ணின் கையிலிருந்த புத்தகம் என்ன பாடம் என்று படிக்க முயன்றேன். ஆனால் அதற்கு மேல் வட்டமான ’தயிர்சாதம் மாவடு’ டிபன் பாக்ஸ் மறைத்துக்கொண்டது. அந்தப் பெண் இறங்கும்போது கவனிக்கமுடிந்ததில் ‘சுற்றுச்சூழல் அறிவியல்’. கல்லூரிக்கு அருகில் ஓடிய வாய்க்கால் தொடங்கி ஊர் முழுவதும் எங்கும் தண்ணீர் இல்லை. அதற்கு பதில் பிளாஸ்டிக் கேரிபேக்!


‘மங்க மடம்’ என்று அதில் இருக்கும் ’கை’யை எடுத்துக்காட்டி இறங்கிவிட்டார் கண்டெக்டர். “பத்து நிமிஷத்தில திருநகரி போயிடலாம்” என்ற ஆட்டோவில் திருநகரிக்குப் பயணமானேன்.


‘மங்கை மடம்’ என்பது திருமங்கையாழ்வார் காலத்தில் அவர் ஸ்ரீவைஷ்ணவர்கள் 1008 பேருக்கு ததியாரதனம்(உணவளித்த) செய்த இடம்!.  ததியாராதனத்திற்குத் தேவையான வாழையிலைகளை இலையமதுகூடம் என்ற இடத்திலும் காய்கறிகளை பெருந்தோட்டம் என்ற இடத்திலும் விளைவித்தார். இந்த இடங்கள் எல்லாம் பலியாகாமல் பாகுபலி காலத்திலேயும் இருப்பதற்கு காரணம் பெரிதாக இங்கே கார்ப்பரேட் கம்பெனிகள் வராதது தான்.

[ திருமங்கையாழ்வார் ததியாராதனை செய்த ஊர் என்று எப்படி ?
தேரடி தெருவில் யார் வீட்டு முன்பாக நடந்தாலும். வாங்கோ உள்ளே வந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போங்கோ என்று அன்பாக இருக்கிறார்கள். ]

திருமங்கையாழ்வார் ஏன் ததியாராதனம் செய்தார் என்ற சிறுகுறிப்பை கீழே தந்துள்ளேன். அடியேன்  ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தில் அதைப் படித்துமுடித்துவிடலாம்.


திருமங்கை ஆழ்வார் சிறுகுறிப்பு: 

சோழமண்டலத்தில் திருக்குறையலூர் என்ற சிற்றூரில் கள்ளர் குடியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், பௌர்ணமி, வியாழக்கிழமை அன்று இவ்வாழ்வார் பிறந்தார். இவருக்கு பொற்றோர்கள் வைத்த பெயர் ‘நீலன்’. இவரது வீரத்தைப் பார்த்து மகிழ்ந்த சோழ மன்னர் நீலனை தன் படைத்தளபதியாக ஆக்கியதுடன் திருவாலிநாட்டு மன்னனாகவும் ஆக்கினார்.

அதே சமயம் கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குழுதவல்லி என்ற பெயரில் பெண் ஒருத்தியின் அழகையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கையாழ்வார் அவளை திருமணம் செய்ய விரும்பினார். குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்யவேண்டுமானால் ஓர் ஆசார்யனிடம்  பஞ்சசம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தைனை விதித்தார்.

நீலன் மீது இருந்த பயம் காரணமாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க யாரும் முன்வரவில்லை. மங்கை மன்னன் திருநறையூருக்குச் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் பிரார்த்தித்து அப்பெருமானிடமிருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றார். நேராக குமுதவல்லியிடம் சென்று திருமணம் செய்துக்கொள் என்றார்.

ஆனால் குமுதவல்லியோ, அது போதாது 1008 ஸ்ரீவைணவர்களுக்கு ஒரு வருட காலம் தினமும் ததியாராதனம் (அமுது படைக்க வேண்டும்) என்று மீண்டும் ஒரு நிபந்தனையை விதித்தார். ஆழ்வார் குமுதவல்லியிடம் கொண்ட காதல் மிகுதியால் அதற்கும் இசைந்தார்.

நிபந்தனையின் பேரில் அமுது படைக்கத் துவங்கினார். இதனால் அரண்மனையின் நிதிநிலை சரிந்தது. இதனால் சோழ மன்னனுக்குக் கப்பங்கட்ட முடியவில்லை. கோபமடைந்த அரசன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரைப் பிடித்துவரும்படி கூறினார். ஆழ்வார் அவர்களைப் புறமுதுகிட்டு ஓடசெய்தார். ஆழ்வாரின் வீரத்தில் வியந்த மன்னன் நேரில் சென்று நீ கப்பங்கட்டிவிடு என்று அறிவுரை கூறி, இதுவரை கப்பம் கட்டாததற்கு மூன்று நாள் சிறையில் அடைத்தார்.

மங்கை மன்னன் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து எம்பெருமான் பொருளுதவி செய்வதாகக் கூறினார். திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் அனுமதிப்பெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் கிடைத்தது அப்புதையலை வைத்து மன்னனுக்குக் கப்பம்கட்டியது போக மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார் இதனை அறிந்து வியந்த சோழ மன்னன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து அமுது படைக்க வைத்துக்கொள் என கூறினார். அந்தப் பணமும் தீர்ந்துபோக, தன் அமைச்சர்கள் துணையுடன் பணக்காரர்களிடம் வழிப்பறிக் கொள்ளையடித்து அமுது படைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பெருமாள் பிராட்டியுடன் மணக்கோலத்தில் வந்தார்.  ஆழ்வார் தன் படையினருடன் அந்தத் தம்பதிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டார். ஆனால் கால் அறுகாழியை(மெட்டி) மட்டும் பெருமாள் கழட்டவில்லை. ஆழ்வாரும் அறுகாழியைக் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்றார்.

ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுத்தார். “எம் கலியனோ?”  என்று பெருமாள் ஆழ்வரைப் பார்த்து வியந்தார். பின்பு தாம் கொள்ளைகொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, “நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம், சொல்?” என்று கேட்டார். பெருமாள் ஆழ்வாரை அருகே அழைத்து, அவர் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.


மேலே ஆழ்வார் கொள்ளையடித்து, உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு பெயர் “திருவேடுபறி” உற்சவம். இன்றும் பல திவ்ய தேசங்களில் நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி. அங்கே நடைபெறும் வேடுபறி எல்லாம் மிமிக்கிரி நிகழ்ச்சி மாதிரியே. திருவாலி திருநகரியில் அடியேன் சேவித்த வேடுபறி ‘A class apart’

அன்றைய நாளில் அடியேன் அனுபவித்த காட்சிகள் - பிற்பகல் திருவாலியில் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயாருக்கும் ஸ்ரீவயலாலிமணவாளனுக்கும் விமர்சையாக கல்யாண உற்சவம், கோஷ்டி நடைபெற்றது. பின்னர் மாலை பொழுதுசாயும் வேளையில் பல்லக்கில் திருமணமான புதுமணத் தம்பதிகள் திருநகரிக்குப் பயணம் செய்கிறார்கள். .

திருவாலியிலிருந்து திருநகரி சுமார் 4 கிமீ. தூரம் ஆனால் போகும் பாதை? ( பார்க்க படம் )

பல்லக்கு நடந்து செல்லவில்லை, ஓடியது. ஊர் இளைஞர்கள் எப்படி அப்படி ஓடுகிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. அடியேனுக்கு அவர்கள் பின் ஓட முடியவில்லை - காரணம் -  வேகம், இருட்டு  மற்றும் சாலை முழுக்க சின்னச் சின்னக் கற்கள். செருப்பில்லாத கால்களுக்கு, கற்கள் குத்துவது  பழக்கப்பட்டபோது பல்லக்கு வயலுக்குள் இறங்கியது!

பாத்திக்கட்டி நாத்து நட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் பருத்திச் செடிகள். இவர்கள் ஓடுமிடமெல்லாம் பயிர்கள் நாசமாயின.

“ஐயோ செடிகள்  எல்லாம் நாசம் ஆகிவிட்டதே” என்றேன்.

பக்கத்தில் இருந்தவர், “பதிலுக்கு ஆழ்வார் பலமடங்காக கொடுத்துவிடுவார்..” என்றார் பதிலாக.

“இப்படி நாசம் செய்தால் வயலுக்கு சொந்தக்காரர் சும்மா இருப்பாரா?”

“அட நீங்க வேற... பெருமாள் அவர்கள் வயல் வழியாகச் செல்ல காத்துக்கொண்டிருக்கிறார்கள்”

நானும் வயலில் இறங்கினேன். கணுக்கால் வரை சேறு. காலை எடுத்து பல்லக்குடன் ஓட முற்பட்டேன். அப்போது தான் தெரிந்தது அது சேறு மட்டுமில்லை, நல்ல களிமண்ணும் கூட.

நான் ஓடுவதை யாராவது பார்த்திருந்தால் காதலியை ரொம்ப நாள் பிரிந்த ஹீரோ காதலியைப் பார்க்க ஓடும் ஸ்லோ மோஷன் காட்சி எஃபெக்ட் கிடைத்திருக்கும். பெருமாளைத் தேடினேன்... தூரத்தில் தீவெட்டிகள் தெரிந்தன.

களிமண்ணில் நடப்பதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது அதில் வேலை செய்யும் விவசாயிகள்? சற்று நேரத்தில் காலில் களிமண்ணினால் ஆன செருப்பு இலவசமாகக் கிடைத்தது. ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு அடுத்த வயலில் இறங்கினேன். அங்கே நெற்கதிர்கள் அறுத்துப்போட்டிருந்தார்கள்.

களிமண்ணுடன் நெற்கதிர்களும் ஒட்டிக்கொண்டு, அடியேன் பஞ்சகச்சத்துடன்...  அந்த தமாஷை இருட்டுதான் காப்பாற்றியது. சற்றுநேரத்தில் பெருமாள் ஏதோ ஒரு வீட்டின்முன் மரியாதையை வாங்கிக்கொண்டிருந்தபோது எப்படியோ அவரைக் கண்டுபிடித்து அவருடன் சேர்ந்துவிட்டேன்.

திருமணங்கொல்லை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மீண்டும் நடைபயணம் திருநகரிக்கு... கொள்ளையடிக்க ஆழ்வாரை அழைத்துக்கொண்டு வர...

திருநகரியில் ஆழ்வார் கையில் வேலுடன், தன் ஆடல்மா குதிரையின் மீது அமர்ந்துக்கொண்டிருக்க, அங்கே ஆழ்வாரின் சிஷ்யர்கள் நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான் போன்றவர்கள் ஒற்றர்களாக வந்து ஆழ்வாரிடம் புதுமணத் தம்பதிகள் நிறைய ஆபரணங்களுடன் இருக்கிறார்கள் கொள்ளை அடிக்கலாம் என்று சொன்னவுடன் அதிவேகமாக ஆழ்வார் புறப்படுகிறார்!.

பெருமாள் வேகத்திற்கு அவர் பின்னால் ஓடமுடியவில்லை. ஆடல்மா குதிரைக்கு ஈடுகொடுக்க முடியுமா?

திருமணங்கொல்லையில் வேடுபறி உற்சவத்தைக் காண அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் குழந்தைகுட்டிகளுடன் மக்கள் நள்ளிரவு 12.30 மணிக்கே கூடிவிட்டார்கள்.

“இந்த சைடுல வருவார், அப்படியே சுத்து சுத்துவார்”

“இங்கிருந்து பார்த்தா சரியா தெரியாது”

“அந்த மண்டபத்தில தான் ஆழ்வார் இருப்பார்... அந்த மண்டபம் பெருமாளுக்கு..”

சற்றுநேரத்தில் வரிசையாக சுமார் 500 தீப்பந்தகள் வரத்தொடங்கியபோது the crowd got electrified !

வேடுபறிக் காட்சிகளை விவரிக்க இயலாது. அதை அங்கே கண்டுகளிக்க வேண்டும். அடியேன் அதை பத்து நிமிட வீடியோவாகத் தொகுத்துள்ளேன். (பார்க்க வீடியோ)திருமணங்கொல்லையில் தெய்வங்களுக்கு அரசான ஶ்ரீமந் நாராயணன் பெரிய பிராட்டியாருடன், புட்களுக்கும் திருவடிக்கும் அரசான ஶ்ரீகருடாவார் என்ற பெரிய திருவடி மீது அமர்ந்து மரங்களுக்கு அரசான திருஅரசமரத்தின்கீழ் மந்திரங்களுக்கு அரசான திருமந்திரத்தை (திரு எட்டெழுத்து மந்திரத்தை) ஆலிநாட்டுக்கு அரசான ஶ்ரீ திருமங்கைமன்னனுக்கு உபதேசம் பெற்ற இடத்தில்(திருமணங்கொல்லை) அடியேனும் இருந்தேன் என்பதே பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.


அங்கே வேடுபறி உற்சவத்தின் போது கோஷ்டியில் ‘வாடினேன் வாடி’ என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தை சேவிக்கும் போது ஆழ்வாரே உருகிப் பாடுகிறாரோ என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. அதுவும் “நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று சொல்லும்போது கூஸ்பம்ஸ்.

எட்டு எழுத்து மந்திரத்துக்கு அப்படி என்ன விஷேசம் ? பெருமாளுக்கு பல பெயர்கள் உண்டு. அவைகளுக்குள் முக்கியமான பெயர். நாராயணன். அஜாமிளன் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாராயணன் என்ற பெயரைத் தான் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் விரும்பினார்கள் என்று பிள்ளைலோகாசாரியர் முழுக்ஷுப்படியில் தெரிவிக்கிறார்.

‘வாண்புகழ் நாரணன்’, ‘வாழ்புகழ் நாரணன்’ என்கிறார் நம்மாழ்வார். ‘நலந்திகழ் நாரணன்’ என்கிறார் பெரியாழ்வார். ‘எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானமாளவே’ என்கிறார் திருமழிசை.

திருமங்கை மன்னன் “நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்”. கண்டுகொண்டது மட்டுமல்லாமல் அந்த நாமத்தை சேவித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பட்டியலிடுகிறார்.
(நாராயணன் என்னும் நாமம் பற்றி தனியாக கட்டுரை ஒன்று எழுதலாம்.)

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்''

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.

வேடுபறி உற்சவம் முடிந்தபின் கையிலிருந்த காகிதத்தில் சிறிது மண்ணை மடித்து பையில் வைத்துக்கொண்டேன். அந்த இடம் திருமந்திரம் விளைந்த மண். (பார்க்க படம்).  ரகசியம் விளைந்த மண் என்று ஒன்று இருக்கிறது ஸ்ரீரங்கத்தில் அதை பற்றி பிறகு ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். ]

திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை இந்தப் பதிவில் ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒலி ஒளி வடிவில்) மீண்டும் உங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.ராமானுச நூற்றந்தாதி இரண்டாம் பாசுரத்தில்

“குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு” என்பதை குறிக்கும் விதமாக

திருமங்கை ஆழ்வார் மார்பில் நம்மாழ்வாரும் பாதத்தில் ஸ்ரீராமானுஜரும் என இந்த ஆழ்வார் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

திருமங்கையாழ்வார் மேலும் சில குறிப்புகள்: 

நம்மாழ்வாரின் பாசுரங்களில் அவர் பெருமாளிடம் கொண்டுள்ள மிகுதியான அன்பும், அச்சாவதாரத்தில் அவர் கொண்டுள்ள பேரார்வமும் நமக்குத் தெரிகிறது. அதுபோன்றே திருமங்கை மன்னனின் பிரபந்தங்களே, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் காட்டிலும், நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பெரிதும் ஒத்திருப்பதால் அவை ஆறங்கமாக விளங்குகின்றன என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அனுபவிக்கின்றார்.

"மாறன் பணிந்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்,
ஆறங்கம் கூற"
உபதேச ரத்தின மாலையில்(பாடல் 9)

இதையே வேதாந்த தேசிகன் "அறிவு தரும் பெரிய திருமொழி.." என்று தேசிக பிரபந்தத்தில் ( பாடல் 379 ) ஆனந்தப்படுகிறார் திருமந்திர உபதேசம் பெற்றதை ஸ்ரீ ராமானுஜர் (பெரிய திருமொழி தனியன் - 2) "மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன்" அனுபவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் திவ்ய பிரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் சென்ற வரிசையிலேயே அதை எல்லாம் பாடியுள்ளார் என்பது மேலும் சிறப்பு.

இவ்வாறு விரைவாகப் பாடும் அகக்கவியாகவும், இனிமை ததும்பப் பாடும் மதுரகவியாகவும், விரிவான அளவில் பாடும் வித்தாரக் கவியாகவும், இரதபந்தம் பாடும் சித்திரக் கவியாகவும் இருப்பதால் "நாலுகவிப் பெருமாள்" என்று அழைக்கப் பெற்றார் என்கிறது திவ்விய சூரிசரிதம் பாடல் 9.

திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் பலவகை யாப்புகளைக் கையாண்டுள்ளார். பெரிய திருமொழியில் 108 பாடல்களில் 68 பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை, கலி விருத்தத்தில் அமைந்தவை 15; கொச்சகக் கலிப்பாவால் அமைந்தது 18, கலிநிலைத் துறையால் அமைந்தவை 9, ஆசிரியத் துறையால் அமைந்தவை 3, வெண் துறை, வஞ்சி விருத்தம், கலித்தாழிசையில் ஒன்று. திருக்குறுந்தாண்டகம் 20 பாடல்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினால் அமைந்தவை. திருநெடுந்தாண்டகம் 30 பாடல்களும் எண்சீர் ஆசிரிய விருத்தத்தினால் ஆனவை. திருவெழு கூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆகியது. சிறிய/பெரிய திருமடல்கள் கலிவெண்பாவினால் ஆனது).


சில பயண குறிப்புகள் 

எனக்கு இந்த அனுபவத்தை சாத்தியாக்கியதற்கு காரணம் ஸ்ரீஉ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி.  அவர்களுக்கு 76 வயது!. கோயிலில் முதல்தீர்த்தக்காரர். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக பல பாகவதர்களுக்கு உதவி செய்கிறார். தன் கையால் காபி கலந்து கொடுக்கிறார். சில இடங்களில் படம் எடுக்கக் கூடாது என்றால் அதை மென்மையாகச் சொல்கிறார். இனிமையாகப் பேசுகிறார். நான் கவனித்த ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்.

திருவாலியில் கோஷ்டி நடந்து முடிந்த பின்னார். பிரசாதம் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாக கோஷ்டி முடிந்த பின் தான் மற்றவர்களுக்கு பிரசாதம். அவர்களுக்கு தான் முதல் மரியாதை. அன்று கோஷ்டியில்  இல்லாத ஒருவர் தனக்கும் கொஞ்சம் பிரசாதம் வேண்டும் என்று கைநீட்டினார். பொதுவாக மறுத்துவிடுவார்கள். ஆனால் அவருக்கு கொஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் “இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றார். மறுக்கப்பட்டது. இதை தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டு இருந்த எம்பார் ராமானுஜன் ஸ்வாமி பிரசாதம் கொடுத்துக்கொண்டு இருப்பவரைக் கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார். பிறகு மறுக்கப்பட்டவருக்கு கை நிறைய பிரசாதம் வழங்கப்பட்டது.

வேடுபறி முடிந்து மறுநாள் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவித்துவிட்டு, கத்யத்ரயம் கோஷ்டியில் இருந்தேன். கோஷ்டிக்கு கல்கண்டு பிரசாதம் விநியோகித்தார்கள். என் பக்கத்தில் இருந்தவர் வாங்கிக்கொண்டார். நான் சும்மா இருந்தேன்.  “ஸ்வாமி நீங்களும் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார் பக்கத்தில் இருந்தவர். நான் கை நீட்டினேன். கல்கண்டைக் கையில் எடுத்தவர் என் திருமண்காப்பைப் பார்த்து நகர்ந்துவிட்டார்.

திருநகரியில் கோயில் கிணற்றிலிருந்து பாட்டி தந்த அந்த கல்கண்டுத் தண்ணீரை விட இந்த கல்கண்டு இனித்துவிடப் போகிறதா என்ன ?

Friday, April 14, 2017

நினைவு அலைகள் – ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன், TSS Rajan (1880–1953). வடகலை ஐயங்கார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து, சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பிறகு பணி நிமித்தம் ரங்கூனுக்குச் சென்று கஷ்டப்பட்டு, மேல்படிப்புக்காக லண்டன். இந்தியா வந்த பிறகு ஏழைகளுக்கு மருத்துவம், ராஜாஜியுடன் நட்பு, காந்தியுடன் பழக்கம். உப்பு சத்தியாகிரம் - 18 மாதம் சிறை, மந்திரிப் பதவி, விவசாயம் என்று அவர் வாழ்க்கைப் பயணம் முழுக்க புஃபே சாப்பாடு மாதிரி வரலாற்றுக் குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன.

“Autobiography is probably the most respectable form of lying” என்பார்கள். பழைய சுயசரிதை என்றால் அதன்  ‘இங்ரெடியண்ட்ஸ்’ என்று நாம் நினைப்பது - கொஞ்சம் பொய், நிறைய சலிப்பு, புரியாத தமிழ். ஆனால் ராஜன் அவர்களின் சுயசரிதை அப்படி இல்லை. இன்று வந்த தினத்தந்தி மாதிரி எல்லோரும் படிக்கக் கூடிய தமிழில் எளிமையாக இருக்கிறது. பொய் கலக்காத அக்மார்க் சுயசரிதை. டைரிக் குறிப்பு போல இல்லாமல்,  ‘நினைவு அலைகளாக’ அவர் அனுபவத்தைக் கொண்டு பல  ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளை’ உருவாக்க முடியும்! இதுதான் இந்தப் புத்தகத்தின் Unique Selling Point.

வெள்ளை கோபுரம் - 200 ஆண்டுகளுக்கு முன்

ஸ்ரீரங்கத்தில் தன் பள்ளி நாட்களை விவரிக்கும் இடங்களில் ஒரு குழந்தையாக எழுதியிருக்கிறார் ராஜன். வாத்தியார் ஒருவர் அவரை அடித்துக்கொண்டே இருப்பது, வெள்ளைக் கோபுரம் கருப்பாகக் காட்சியளித்தது, அதில் ஒரு பொந்தில் கிளியைப் பார்க்க ஏணி போட்டு பொந்தில் கைவிட, அது கடிக்க, ரத்தம் வந்த அனுபவம். வகுப்பிலிருந்து வந்து கிளியைப் பார்க்க அடிக்கடி “சார் ஒண்ணுக்கு” என்று சாக்கு சொல்லுவது. ஷேசராயர் மண்டபத்தில் இருக்கும் குதிரையின் மீது ஏறி சவாரி செய்து பள்ளிக்குத் தாமதமாகப் போனது என்று ஸ்ரீரங்கத்தை முழுவதும் அனுபவித்திருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்றால் மேஜை நாற்காலி, பலகை என்று நினைப்போம். ராஜன் படித்த காலத்தில் மணல் மீது உட்கார்ந்து, மணல் மீது எழுதும் பள்ளிக்கூடம். சித்திரைத் தேர் மீது ஏறும் படிக்கட்டுக்குக் கீழே நிழலாக இருக்கும் இடம்தான் பள்ளிக்கூடமாம்.

நூறு வருடத்துக்கு முன்பே ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிக்குப் பலர் கடைவிரித்திருக்கிறார்கள். பட்டாணியும் வேர்க்கடலையும் வறுக்கும் வாசனை ராஜனைச் சுண்டி இழுக்க பட்டாணிக் கடையைச் சுற்றிசுற்றி வந்திருக்கிறார். வீட்டிலிருந்து பாட்டிக்குத் தெரியாமல் நெருப்பும் தண்ணீரும் கொடுத்து பட்டாணிக்காரருக்கு உதவி செய்தும் ஒரு பிடி பட்டாணி கூடக் கிடைக்கவில்லையாம். வீட்டில் கேட்டால் வாங்கித் தர மாட்டார்களாம். ஏன் என்ற காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

“ஸ்ரீரங்கம் பிராமணர்கள் பெருத்த ஊர். பூணூல் போடாத சிறுவர்களும், கல்யாணமாகாத சிறுமிகளுமே வறுத்த பட்டாணியை வாங்கலாம். மற்றவர்கள் வாங்க மாட்டார்கள். வைதீகம் பழுத்த வீடுகளில் பட்டாணியைத் தொடமாட்டார்கள்.”

கடைசியில் அவர் பட்டாணி எப்படிச் சாப்பிட்டார் என்ற சுவாரசியமான கதை புத்தகத்தில் உள்ளது.

ராஜன் குடும்பம் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அஹோபில மடத்தில் இரண்டு அறைகளில் வாடகை இல்லாமல் குடித்தனம் நடத்தியிருக்கிறார்கள். புரட்டாசி உற்சவத்தின்போது அஹோபில மடத்தில் இருக்கும் ஸ்வாமி தேசிகன் வெளியே வரக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பற்றிக் குறிப்பிடும் ராஜன், யாரோ ஒரு வெள்ளைக்காரத் துரை சொன்ன தீர்ப்பை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இரு கலையாரும் கட்டுப்படுவது வேடிக்கை என்கிறார்.

“ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியப் பரம்பரையில் இருகலையார்களும் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஒற்றுமை இருந்தும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற பெரிய விஷ்ணு ஷேத்திரங்களில் இரு கூட்டத்தினருக்கும் விவாதம் ஓயாமல், நீதிமன்றத்து நடவடிக்கைகள், கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள்... வக்கீல்களுக்கும் இதனால் நல்ல வருமானம். கோர்ட்டுகளுக்கு வேலையும் வருமானமும். கட்சிக்காரர்களுக்குப் பொய்ச்சாட்சிகள்... வைஷ்ணவ மதமோ கொள்கையோ, இந்து மதமோ ஆசாரமோ இன்னதென்று கனவு காண்பது கூட இல்லாத... முஸ்லீம், கிறிஸ்துவ நீதிபதிகளிடத்து நியாயம் கோருவதற்கும் பின்வாங்கமாட்டார்கள். இந்த கோஷ்டிச் சண்டைகளில் பெரும்பாலோர் பழையகாலத்து மடிசஞ்சிகள்.”

புரட்டாசி உற்சவத்தில் கிடைக்கும் புளியோதரைக்காக இரண்டு மணி நேர ‘சேவா காலத்’தையும் கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அதேபோலக் கோயிலில் கிடைக்கும் தோசை, வடை பிரசாதத்துக்கு ஆசைப்பட்டு, ஆழ்வார், ஆசாரியர்களை தோளில் தாங்கும் ‘ஸ்ரீபாதம் தாங்குவார்(’1) ஆக
( ஸ்ரீபாதம் தாங்குவாருக்கு உத்திரவாதமாக தீர்த்தம் பிரசாதம் கிடைக்கும்!) இருந்திருக்கிறார்.  அதனால் இவரை ‘ஆழ்வார் தூக்கி’ என்று பள்ளியில் ஏளனம் செய்திருக்கிறார்கள்.

Wednesday, April 12, 2017

அடியேன் ராமானுஜ தாஸன் !

திருநகரிக்கு வந்த அன்று துவாதசி. திருமங்கை அழகனை சேவிக்க சென்றேன். அர்ச்சகர் ஸ்வாமி வர கொஞ்சம் நேரம் ஆகும் என்றார்கள். கோயிலைச் சுற்றி வந்தேன்.

கோயில் உள்ள கிணற்றில் ஒரு வயதான பெண்மணி தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தார்.
தண்ணீரை குடித்துப் பார்க்கலாம் என்று
“பாட்டி குடிக்க கொஞ்சம் தண்ணீர் ” என்றேன்.
என்னைப் பார்த்த பாட்டி பத்து அடி ஒதுங்கி “சாமி எவ்வளவு வேணுமுனாலும் எடுத்துக்கோங்க” என்றாள்.

தண்ணீர் கல்கண்டு. இது மாதிரி தண்ணீர் குடித்ததே இல்லை. விசாரித்ததில் இந்தத் தண்ணீர் தான் மடப்பள்ளியிலும், சன்னதி தெரு முழுக்க தளிகைக்கு உபயோகிப்பார்கள் என்று தெரிந்துக்கொண்டேன்.
அடுத்த முறை சென்றால் நிச்சயம் பருகிவிடுங்கள்.

“பாட்டி ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன்” என்றவுடன்
பாட்டி தன் இரு கையால் முகத்தை வெட்கத்துடன் மூடிக்கொண்டாள்.

பிறகு சன்னதிக்கு சென்ற போது துளசி கொடுத்தார்கள்.
பாட்டி கொடுத்த தண்ணீரும் பெருமாள் அருளிய துளசியும் ’துவாதசி பாராயணம்’ ஆயிற்று.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் எம்பெருமானாருக்கு பிற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருவடி சம்பந்தத்தினால் உயர்ந்த பேற்றை பெற்றார்கள் என்றும், எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அவர் திருமுடி சம்பந்தத்தினால் பெரும் பேற்றை அடைந்தார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் உடையவரோ தாம் ஆழ்வானின் சம்பந்தம் பெற்றதனால் தான் தமக்கு உயர்ந்த பேறு கிடைத்து என்று உறுதியாக நம்பினார்!

ராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்திலும் "மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்று அமுதனார் தெரிவிக்கிறார். முக்குறும்பு என்பது கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); செல்வ செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் ).

இதில் கடைசியில் குலச் செருக்கு அடியேன் உட்பட பலரிடமும் இருக்கிறது. சிறந்த பாகவதர்களை கோயிலில் பார்க்கும் போது அவர் உடம்பில் பூணூல் இருக்கிறதா என்று நம்மை அறியாமல் பார்க்கிறோம். இல்லை என்றால் நம்மை விடத் சற்று தாழ்ந்தவன் என்று நம்மை அறியாமல் நினைத்துவிடுகிறோம்.

கோயிலில் அந்தப் பாட்டி என்னுடைய பூணூல், திருமண்ணை பார்த்து மரியாதை தந்தாள். இருவருக்கும் பார்வை ஒன்று தான் பார்க்கும் விதம் தான் வேறுபடுகிறது!

அடுத்த முறை ”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்” என்ற பகுதியை இரண்டு முறை சேவிக்கும் போது ஒரு முறையாவது பாட்டியை நினைத்துக்கொண்டு குலசெருக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் ”அடியேன் ராமானுஜ தாஸன்” என்று சொல்லுவதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். 

Wednesday, April 5, 2017

சென்னை நவக்கிரக ஷேத்திரங்கள்


நவக்கிரகங்களை திருச்சி கோர்ட் பிள்ளையார் கோயிலில் பார்த்திருக்கிறேன். சிகப்பு, மஞ்சள், வெள்ளை நிற துணிகளை உடுத்தி, வெவ்வேறு திசைகளில் பார்த்துக்கொண்டு எப்போது யாராவது விளக்கு ஏற்றிக்கொண்டோ அல்லது சுற்றிக்கொண்டோ இருப்பார்கள்.
சனிக்கிழமை என்றால் கூட நான்கு பேர் சுற்றுவார்கள். வருடப் பிறப்பு பெயர்ச்சி பலன்கள் அல்லது அன்மை ஜோசியர் விஜயம் காரணமாக இருக்கலாம்.
அதிக ’நிதி’ முதலீடு செய்தவர்கள், எழுத்தாளர்கள் குறிப்பாகச் சினிமாவிற்கு எழுதுபவர்கள், அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்கள், ராசி மோதிரம், கலர் துண்டை நம்புகிறவர்கள், சந்தன பொட்டுடன் குங்கும பொட்டு வைத்திருப்பர்கள் முக்கால்வாசி பேர் நவக்கிரகங்களை நம்புவார்கள்.
நான் நவக்கிரங்களை சுற்றியதில்லை. ஆனால் கடந்த ஞாயிறு அன்று டாக்டர் சித்ரா மாதவன் அவர்கள் மைலாப்பூர் ஆர்.கே அரங்கில் நவக்கிரங்களை பற்றிய சொற்பொழிவைக் கேட்ட போது இத்தினை நாள் சுற்றாத எல்லா நவக்கிரங்களையும் சுற்று வந்த ஃபிலீங்.
சொற்பொழிவு முழுக்க சென்னையை சுற்றி இருக்கும் நவக்கிரக ஷேத்திரங்களை பற்றியது. சூரியனைச் சுற்றினால் என்ன பலன் என்பது போல இல்லாமல், அந்தக் கோயிலை சுற்றிப் பார்த்தால் என்ன மாதிரி கல்வெட்டுகள் இருக்கிறது, யார் கட்டியது, சூரிய பகவான் எப்படி இருப்பார், என்ன கலரில் டிரஸ் போட்டிருப்பார், கையில் என்ன வைத்திருப்பார், கை எவ்வளவு தூரம் மடங்கியிருக்கும். வைத்திருக்கும் தாமரை மலர்ந்திருக்குமா இருக்காதா - ஆகமங்கள் என்ன சொல்லுகிறது என்று ஏ.டி.எம்மில் பின் நம்பரை அடித்தவுடன் ‘சர்ர்ர்’ என்று காசு கொட்டுவது போல பல அறிய தகவல்களை கொட்டினார்.
ஒவ்வொரு நவக்கிரக ஷேத்திரத்தை பற்றிச் சொல்லிய பின் முத்துசுவாமி தீட்சிதருடைய நவக்கிரக கீர்த்தனை ஒன்றை ஜே.பி. கீர்த்தனா அவர்கள் பாடினார். எம்.எஸ். பாலமுரளி போன்றவர்கள் பாடியதை முன்பு கேட்டிருப்பதால் பழகபட்ட பாடலாக இருந்தது.
சென்னை அதுவும் போரூர் சுற்றிய பகுதியில் இந்தக் கோயில்கள் இருப்பது அதுவும் சோழ அரசர்கள் ( பெரிய கோயில் கட்டிய சமயம் ) கட்டியது பக்கத்தில் ஃபிளாட் கட்டும் ரியல் எஸ்டேட் மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நல்ல படியாக பிளாட் விற்றால் பக்கத்தில் இருக்கும் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றினாலும் ஏற்றுவார்கள். வேட்டி சுருங்கி கர்சிப் ஆனது போல முன்பு ஒரு காலத்தில் பெரிய கோயிலாக இருந்த இவை இன்று சிங்கிள் பெட்ரூம் பிளாட் மாதிரி ஆகியிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் Dr.சித்ரா மாதவன். கிளம்பும் போது ஒரு சின்ன ‘ஹலோ’ சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.