Skip to main content

பார்த்தேன் எடுத்தேன் - 2

நம் தேசம் பாரம்பரியம்மிக்கது. கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லை. இங்கே தான் கல்வி, கலாச்சாரம் வளர்ந்தது. மழை, புயல் போன்ற காலங்களில் பலருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. பஞ்சகாலத்தில் மக்களுக்கு உணவுவளித்து காத்துள்ளது. ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னாரகள்.

ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களை வாழ் நாள் முழுக்க பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர்கள் மட்டும் இல்லாமல், விஜயநகர, ஹோய்சாளப் பேரரசர்கள் ஸ்ரீரங்கத்தை பல நூற்றாண்டுகளாக பல் வேறு காலகட்டங்களில் கட்டியது. இங்கே பல மொழிகளில், 644 கல்வெட்டுகள் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் விட்டு சென்ற எழுத்துகள், ஆவணங்கள்.
2013ல் ஸ்ரீரங்கம் சென்ற போது இந்த சின்ன சிற்பம் கண்ணில் பட்டது. சின்ன தவழும் கண்ணன் கையில் வெண்ணையுடன்!. 

கைநாட்டு வைக்கும் கட்டைவிரல் அளவு தான் இருக்கும் இந்த சிற்பம். ஆனால் நாம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்போமா ?
சூப்பர் கம்யூட்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இது போல கையால் செய்வதற்கு ஆள் கிடையாது. இன்னும் நூறு வருடங்கள் கழித்து இந்த பிரம்மிப்பு இன்னும் அதகமாகும். 3D பிரிண்டிங் மூலம் செய்யலாம் ஆனால் இது போல perfection, symmetry கொண்டு வருவது கஷ்டம்.
பேலூர் சிற்பம் 2012ல் எடுத்த படம் ஒன்றை இங்கே போட்டிருக்கிறேன். உற்றுப்பாருங்கள். அதன் முகத்தில் நம் என்ன செய்திருக்கிறோம் ? முகமதியர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

நம் வீட்டு சுவற்றில் யாராவது எழுதாமல் இருக்க “இங்கே நோட்டீஸ் ஒட்டவோ எழுதவோ கூடாது” என்று அறிவிக்கிறோம். ஆனால் நம்மாழ்வார் சொன்ன ‘வீடு’ கொடுக்கும் ஸ்ரீரங்கத்தை ?
தாயார் சன்னதிக்கு பின்புறம் எடுத்த படத்தை பாருங்கள். நம் மக்கள் தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும் என்று தங்களுடைய ரோல் நம்பரை, பெயரை 

கிறுக்கிவைத்துள்ளார்கள். சமீபத்தில் கோயிலை முழுவதும் பல கோடி ரூபாய் செலவு செய்து சுத்தம் செய்ந்துவிட்டு ‘புது நாமம்’ பெயிண்ட் அடித்துள்ளார்கள். எது மேல் ? கல்வெட்டு மேல் அடிக்க கூடாது என்று போராடியவர்கள் பேச்சை கேட்காடதவர்கள் எல்லாம் இத்தனைக்கும் நல்ல படித்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ! பலர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அடியேன் கேள்விப்பட்டேன். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் என்று ஒரு பழமொழி உண்டு.


ஸ்ரீரங்கம் ஸ்ரீவைணஷ்ணவ சம்பிரதாயத்தை தோற்றிவித்த இடம். இன்று வாழும் நமக்கு மட்டும் இது சொந்தம் இல்லை. நாளை வர போகும் நம் சந்ததியினருக்கும் இது சொந்தம். அவர்கள் இதை எல்லாம் பார்த்து ரசிக்க இது ஒழுங்காக பாதுகாக்க வேண்டாமா ? பாதுகாத்தால் “வையத்து வாழ்வீர்காள்” என்று ஆண்டாள் சொன்ன வாக்கு பலிக்கும்.

Comments

  1. "தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும்" - புதிது புதிதாக ஆசாரத்தைக் கண்டுபிடிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. சமீபத்தில் ஐயப்பன் தேவசம் போர்டுகூட, புதிய ஆசாரங்களையெல்லாம் கொண்டுவரக்கூடாது என்று ஒரு நோட்டீஸ் கொடுத்திருந்தது. சபரிமலை தரிசனம் முடித்தபின்பு, திருப்பதி செல்லுபவர்கள் அங்குள்ள புஷ்கரணியில் மாலைகளையெல்லாம் போட்டுவிடுகின்றனர். இதனால் புஷ்கரணியில் நீர்வரும் பகுதியெல்லாம் மூடிக்கொள்கிறது. திருப்பதியில் வரிசைக்கு நிற்கும் இடங்களில் எல்லாம் பெயரை செதுக்குகிறார்கள், இல்லையென்றால், விசிட்டிங்க் கார்டுகளைச் சொருகிவைக்கின்றனர். அதேபோல், காசையும் அங்கங்கிருக்கும் இடைவெளிகளில் சொருகுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிணற்றிலும் (தண்ணீர் இல்லை), காசை வீசி எறிகின்றனர்.

    இத்தகைய, தலங்களையோ அல்லது அதன் வரலாறையோ மதிக்காத போக்குடைய மக்கள் இன் நானிலத்தே உதிப்பார்கள் என்று எண்ணியதால்தான், தென் இந்தியக் கோவில்களில், கர்ப்பக் கிரஹத்தில் பக்தர்களை நுழையவிடுவதில்லை. விட்டால், பழனி முருகனின் மூலவரைச் சுரண்டியதுபோல் நடந்திருக்கும்.

    பேலூர் சிற்பத்தில் தன் பெயரைப் பதித்தவர்கள், இந்த மாதிரி இடங்களுக்கு வருவதற்கு அருகதையற்றவர்கள். வேறு என்ன சொல்வது?

    ReplyDelete

Post a Comment