Skip to main content

இது ’நம்ம ஆளு’

இது ’நம்ம ஆளு’
இந்தப் பெயரை கேட்டவுடன் பழைய கே.பாக்யராஜ் படம் ஞாபகத்துக்கு வந்தால் தொடர்ந்து படிக்கவும்.
சிம்பு படம் நினைவுக்கு வந்தாலும் படிக்கலாம் தப்பில்லை.

’நம்’ தமிழில் ஒரு ஸ்பெஷல் வார்த்தை. நம்ம ஆளு, நம் வீடு, நம் குழந்தை, நம் ஊர், நம் நாடு என்று எங்கு எல்லாம் ‘நம்’ சேருகிறதோ அங்கே எல்லாம் அபிமானம் இருக்கும்.
வாடகை வீட்டில் இருந்தால் வீட்டை காலி செய்யும் போது தான் பெயிண்ட் அடிப்போம். சுமாரான வெள்ளை அல்லது இருக்கவே இருக்கு மஞ்சள் கலர் அடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம். ஆனால் அதுவே சொந்த வீடாக இருந்தால், கலர் சற்றே மங்கினால் கூட கலர் அட்டையை பார்த்து, செலக்ட் செய்து இரண்டு கோட் பெயிண்ட் அடிப்பதற்குக் காரணம் அது நம் வீடு.
ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தினால் அமெரிக்காவோ, ஆந்திராவோ எங்கு இருந்தாலும் நம் நாடு என்று சந்தோசப்படுவோம்.
’நம்ம’க்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை வெகு தூரத்தில் இருந்தாலும் அபிமானம் இருந்தால் மட்டுமே ’நம்’ முன்னாடி சேர்ந்துகொள்ளும். ”எனக்கு அவருக்கும் ரொம்ப தூரம்” என்று கணவன்<->மனைவி ஒருவரை ஒருவர் சகஜமாக புகழ்ந்துகொள்ளும் இந்தக் காலத்தை கடந்து சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால்..
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார், ஆசாரியர் ஏன் பெருமாளுக்கும் இந்த ’நம்’ உண்டு. இதனை உபதேச ரத்தினமாலை,
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
 அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே!
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று
என்கிறார் மணவாள மாமுனிகள். அதாவது அன்புடையார் இவர்களுக்கு அன்பாகச் சாற்றிய திருநாமங்கள் என்கிறார்.
பெரிய பெருமாள் பொங்கும் பரிவாலே பராங்குசனை ‘நம்’ஆழ்வார் என்று தான் எப்போது அழைப்பாராம். திருவத்யயனோத்ஸவத்துக்கு வரும்படி திருமுகம் அனுப்பும் போது முகவரியில் ‘நம்மாழ்வார்’ என்று தான் அனுப்புவாராம். ”நஞ்சடகோபனைப் பாடினையோ ?” என்று நம்பெருமாள் கம்பநாட்டாழ்வாரை கேட்டார்.
நாதமுனிகள் திருவாய்மொழி உபதேசம் பெற்றதால் ‘நம் ஆழ்வார்’ என்று அபிமானித்தார். அதே போல் பட்டர் ‘நம் ஜீயர் வந்தாரோ’ என்று தழுவிக்கொண்டார். அதே போல நஞ்சீயர் ‘நம்முடைய பிள்ளை திருக்கலிகன்றிதாஸ்ரோ’ என்று அழைக்க அவர் ‘நம்பிள்ளை’ யானார். ( இவர்களைப் பற்றி பிறகு ஒரு விரிவாக எழுதுகிறேன் )
ஒருநாள் பெரிய பெருமாளுக்கு ஏதொ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்தவுடன், பெரிய நம்பியைப் பெரிய கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் ப்ரார்த்தித்தார்கள். பெரிய நம்பி தன்னுடைய நிழல் போல பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும் என்று விண்ணப்பிக்க ”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூடத்தாழ்வான்” என்று என்றாராம் பெரிய நம்பி. திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில் “மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்” என்று பாடுகிறார். இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்பர்.
எல்லா ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அபிமானித்த பெரிய பெருமாள், நம்பெருமாள் ஆனார். அவரே நம்ம ஆளு!.

Comments

  1. "நம்" சிறப்பு நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. நல்ல எழுத்து நடையை, ஆழ்வார்கள், ப்ரபந்தம், வைணவ வரலாறு முதலியவைகளைப் பற்றி எழுதுவதில் செலவழிக்கும்போது, நிறைய செய்திகளை எளிதாகப் புரிந்துகொள்ளமுடிகிறது. "பெரியநம்பி","திருமலைநம்பி", மற்றும் ஒருவரது பல பெயர்களை ஒரே கட்டுரையில் குறிப்பிடும்போது குழப்பம் வந்துவிடுகிறது.

    "தன்" என்பதற்கும் "நம்"/"தம்" என்பதற்கும் எவ்வளவு வேறுபாடு.

    ReplyDelete

Post a Comment