Skip to main content

படியாய் கிடந்து..

ஸம்பிரதாயத்தில் ஸ்ரீராமரை பெருமாள் என்று தான் அழைப்பர்.எல்லா வியாக்கானங்களிலும் ராமரை ‘ராமர்’ என்று பூர்வாச்சாரியகள் யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். பெருமாள் என்று தான் அழைப்பார்கள்.

ஆனால் கண்ணனை பெருமாள் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்!
சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் என்று ஊரில் யாரும் பெயர் சொல்லிஅழைக்க மாட்டார்கள். எல்லோரும் பெரிய பெருமாள் என்று தான் அழைப்பார்கள், அதே போல் பெரிய பிராட்டி.

குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ஆட்சி புரிந்த மன்னன்.
ஸ்ரீராமர் கதை கேட்கும் போது தாம் யார் என்பதும் மறந்து, ராமருக்கு தன் படையுடன் புறப்பட்டார். ஆழ்வார் ஸ்ரீராமன் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர்.

ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் இடத்து மிகுந்த பக்தி கொண்டு ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். அந்த கதை பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். அதே போல் அவர் எழுதிய ஒரு பாடல் மிக பிரசித்தம் ஸ்ரீநிவாசன் என்று ஏதாவது பாடல் பாட வேண்டும் என்றால் உடனே இந்த ஒரு பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு மெயின் பாட்டுக்கு சென்றுவிடுவார்கள்.

”செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே”

இதில் ஆழ்வார் திருமலையில் படியாகக் கிடக்கிறேன் என்று விருப்பப்படுகிறார். இதனால் தான் இன்றும் பெருமாள் கோயில் வாசற்படி ’குலசேகரப்படி’ என்று யாரும் மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஸ்ம்பிரதாயம்இந்தப் பாடலை அப்படியே படிக்காமல் அதன் முன்னே உள்ள பாசுரங்களையும் அதற்குப் பிறகு உள்ள பாசுரங்களையும் சற்றே பார்க்கலாம். ( அடுத்த முறை உங்களுக்கு இந்தப் பாடலை கேட்கும் முன் இது ஞாபகத்துக்கு வந்தால் சந்தோஷம் )

“ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்” என்று தொடங்கும்
முதல் பாடலில் திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். அடுத்த பாடலில் புதராய் இருக்க விருப்பப்படுகிறார். அப்படியே மலை உச்சி, காட்டாறாக, வழியாக வேண்டும் மேலும் ஆசைப்படுகிறார்.

இதை எல்லாம் சாதாரணமாக பார்த்தால் ஏதோ ஒன்று ஆக வேண்டும் என்று
விருப்பப்படுகிறார் என்று தோன்றும். ஆனால் இவை எல்லாம் - மீன், செண்பக மரம் எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது.

பறவையாக இருந்தால் எங்காவது பறந்துவிட்டால் ? மீன் அதுவும் எங்காவது நீந்திச் செல்ல வாய்ப்பு இருக்கிறது ? சரி பொன்வட்டில் நல்ல விஷயம் ஆனால் எங்கே தனக்கு பொன் என்ற கர்வம் வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார். சரி மலராக பெருமாளுக்கு மாலையாக ? மலர் வாடிவிடும், சரி அதன் மரமாக ? மரம் வெட்டப்படலாம் ? ஆறு - ஆறு வற்றிவிட்டால் ? சரி சந்நிதிக்கு போகும் வழியாக ? நாளை அந்த வழி மாறலாம் அல்லது இடித்துவிட்டு புதுசாக போடலாம் ஆனால் வழி இருந்தால் அவன் திருமுகத்தை தரிசிக்க முடியுமா ? அவன் கல்யாண குணங்களை பார்த்துக்கொண்டு இருக்க என்ன வழி என்று ஆழ்வார் யோசிக்கிறார்.

நாம் பக்தராக திருப்பதிக்கு சென்றால் கொஞ்சம் நேரம் ( இந்தக் காலத்தில் அதுவும் முடியாது ‘ஜருகண்டி’ ) இருக்கலாம் ஆனால் அங்கேயே இருக்க முடியுமா ? அர்ச்சகர் கூட நடை சாத்திய பின் வீட்டுக்கு வந்துவிட வேண்டும்.நன்றாக யோசித்துப்பாருங்கள், வைகுண்ட ஏகாதசி ஒரே கூட்டம் அப்போது உங்களை யாரோ ஒருவர் கோயில் கைங்கரியம், முத்தங்கி சேவை ஒரே கூட்டம், கொஞ்சம் கூட்டத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்று உங்களுக்கு ஒரு வேலைக் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். கூட்டத்தை ஒழுங்கு செய்யும் சாக்கில் பெருமாளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அல்லவா ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’ மாதிரி படியாய் கிடக்கிறேன் இன்று கோரிக்கை வைக்கிறார். அடியார்கள் அதன் மீது ஏறிச் செல்வார்கள், அதனால் அடியார்களின் பாத தூளியும் கிடைக்கும் அதே சமயம் பெருமாளின் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் இருக்கலாம். 2-in-1 ஆக பெருமாளுக்கும் கைங்கரியம் செய்ய முடியும் அதே சமயம் அடியார்களுக்கும் கைங்கரியம் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் இதுலேயும் ஒரு பிரச்சனை இருக்கு. படி என்பது ஒரு கல் அது ஸ்கூலில் படித்த மாதிரி ஒரு non living thing. அச்சேதனம். அப்படி என்றால் படியாக இருந்தால் பெருமாளை தரிசிக்க முடியாது. ஆனால் அச்சேதன படியாக இருக்க வேண்டும் அதே சமயம் பெருமாளை ’காணும் படியாக’ இருக்க வேண்டும். அதனால் தான் படியாக கிடந்து உன் “பவளவாய் காண்பேனே” என்கிறார். படி எப்படிப் பார்க்க முடியுமா ? என்று உங்கள் மனதில்
தோன்றலாம். பெருமாள் நினைத்தால் எதுவும் முடியும் ! இதற்குப் பல உதாரணங்களை நீங்கள் கிருஷ்ணாவதாரத்தில் வீட்டுப்பாடமாக யோசிக்கலாம்.

அடுத்து பெருமாளிடம் தன் இஷ்டப்படி இப்படிக் கேட்கிறோமே அது சரியா என்று யோசித்து ’சரிப்பா உன் இஷ்டம்’ என்கிறார். அதனால் தான் “பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே ” என்று முடிக்கிறார்.

இன்று மாசிப் புனர்ப்பூசம் - குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்.
8.3.2017

Comments

  1. ரசித்தேன். நீங்கள் அடிக்கடி எழுத ஆழ்வார்கள், எம்பெருமானார் திருநட்சத்திரங்கள் வரணும்போலிருக்கு.

    பிரபந்தத்தை பத்தி பிரித்துப்போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். செடியாய-செடி போல் அடர்ந்துள்ள.. ஆழ்வாருக்கே அப்படின்னா, நமக்கெல்லாம் "காடாய வல்வினைகள்"தான்.

    'குலசேகரன் படி', கருவறைக்கு முன்புள்ள படிமட்டும்தானா அல்லது, கோவில் நுழைவு வாயிலில் உள்ள படியுமா? இது எல்லாப் பெருமாள் கோவில் படிக்கும் பொருந்துமல்லவா?

    ReplyDelete
  2. அவர் அப்பா இல்லை. அப்பப்பா. கட்டுரை எழுத ஆரம்பித்த போது இவ்வளவு பெரிய கட்டுரை எழுத திட்டமிட்டிருக்க மாட்டீர்கள்.உண்மையான உணர்வுகள் உங்கள் பேனாவை எழுத வைத்துவிட்டன.- பி எஸ் ஆர்

    ReplyDelete

Post a Comment