Skip to main content

Posts

Showing posts from 2010

ஆவி கதை

செல்போன் மாதிரி என் பெயர் ரொம்பப் பொதுவானது. டைரக்டரியை எடுத்துப் பாருங்கள்; பத்து பக்கத்துக்கு என் பெயர் விதவிதமான இனிஷியல்களில் அடுக்கியிருக்கும். ஆனாலும் நான் வித்தியாசமானவன். நினைவு இருக்கும்போதே கேட்டுவிடுகிறேன், உங்களிடம் செல்போன் இருக்கிறதா? மெசேஜ் அடிக்கத் தெரியுமா? நல்லது. உங்கள் செல்போனில் Prediction ஆன் செய்துவிட்டு 5477 என்று டைப் அடித்துப் பாருங்கள். என்ன வருகிறது? Lips என்று வருதா? இதற்கு மாற்று வார்த்தை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்கள் சொல்போனில் கீழே இருக்கும் * பட்டனை அழுத்துங்கள். Kiss என்று வருகிறதா? இந்த இரண்டு வார்த்தைகளும் வரும்வரை கதையை மேற்கொண்டு படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் கடைசியில் கதை புரியாது. இப்பொழுது எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிவிடுகிறேன் - என்னால் ஆவிகளுடன் பேச முடியும். உடனே, ஆவிகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. எல்லாம் சுத்த புருடா என்று எல்லோரும் சொல்லுவதைப் போல நீங்களும் சொல்லாதீர்கள். எனக்கும் நம்பிக்கை கிடையாது, மாலாபுரம் செல்லும் வரை.

சூரியனை பார்த்தால் தும்மல் வரும்

இரண்டு வார விடுப்புக்கு வெளியூர் செல்லுமுன் சமையல் அறையை ஒழித்துக் கட்டும் போது ஒரே ஒரு சின்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிடைத்தது. தூக்கிப் போடலாம் என்று எடுத்த போது அதன் மேற்புறம் இளம் சிகப்பில் சின்ன சின்ன முளைகளைப் பார்க்க முடிந்தது. தூக்கி போட மனம் வராமல் பால்கனியில் இருக்கும் ஒரு மண் தொட்டியில் அதை ஊன்றி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கிளம்பினேன். இரண்டு வாரம் கழித்து திரும்ப வந்தபோது, பால்கனியில் இன்ப அதிர்ச்சி; சர்க்கரை வள்ளிக் கிழங்குச் செடி கொடிபோலப் படர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சிச் சின்னம் போல அதன் இலைகள்.

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சிவசமுத்திரம் பெங்களூரிலிருந்து 130 கீமீ தூரத்தில் மாண்டையா மாவட்டதில் இருக்கிறது. கூகிளில் தேடியபோது இரண்டு வழிகள் இருப்பது தெரிந்தது. ஒன்று கனகபுரா மார்கமாகச் செல்லும் வழி. இன்னொன்று மைசூர் நெடுஞ்சாலையில் செல்லும் வழி. சோமநாத்பூர் சென்ற போது கனகபுரா மார்க்கம் ஒரு மார்க்கமாக இருந்ததால், மைசூர் வழியையே தேர்ந்தெடுத்து, வழக்கம்போல காமத் லோகருச்சி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சென்றடைந்த போது மதியம் மணி பன்னிரண்டு. சிவசமுத்திரம் பற்றி நிறைய தகவல்கள் கூகிளில் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அருவியைப் பார்க்கப் போனபோது கையில் தின்பண்டங்கள் இல்லாத டம்மியாக இருந்தது அங்கிருந்த குரங்குகளுக்கு ஏமாற்றம். அருவியில் தண்ணீர் கம்மியாக வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஏமாற்றம். திரும்பிப் போகும்போது மாடு ஒன்று மூச்சா போய்க்கொண்டு இருந்தது. "சிவசமுத்திரத்தைவிட மாடு மூச்சா அதிகமா இருக்கு," என்று குடும்பத்தினர் கமெண்ட்.

கை நிறைய காண்டம்

சம்பளம், டெக்னாலஜி, வெளிநாடு - இது தான் புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் சொல்லும் காரணம். ஆனால் கொரியா, சீனா கம்பெனியிலிருந்து வருபவர்கள் சொல்லும் காரணம் - சம்பளம் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வேளா வேளைக்கு வீட்டுக்கு போகணும் என்பதுதான். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதிய கம்பெனி ஒன்றில், சேர்ந்த சில நாள்களில் பிராஜக்ட் விஷயமாக கொரியா செல்ல வேண்டும் என்றார்கள். என்ன வேலை என்று கேட்டதற்கு “பிராஜக்ட் மேனேஜ்மெண்ட்” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ‘ஹிட்டன் அஜண்டா’ (Hidden Agenda) புரியாமல், நம்மை மதித்து பெரும் பொறுப்பைத் தருகிறார்களே என்று உள்ளுக்குள் புல்லரித்து, நாமும்தான் கொரியா சுற்றிப் பார்த்ததில்லையே என்று அல்ப ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்று கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து, ‘சரி’ என்று கிளம்பினேன். கொரியா சேர்ந்தவுடன் சில அதிர்ச்சிகள் அந்தக் குளிரில் காத்துக்கொண்டு இருந்தன. இறங்கிதும் எனக்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலை அடைந்து ”ஒரு மாதத்துக்கு ரூம் வேண்டும்” என்றேன். “என்ன ஒரு மாசத்துக்கா?” என்று முதல் போணியாக ஆம்பள

கலர்க் கனவுகள்

இரண்டு நாளைக்கு முன்பு அலுவகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், எப்போதும் போல அமுதன் ஓடி வந்து என் மீது ஏறிக்கொண்டான். கையில் தந்தையர் தின வாழ்த்து அட்டை . நர்சரி ஸ்கூலில் அவன் கை அச்சை கொண்டு செய்தது. என் வாழ்நாள் பொக்கிஷம். - 0 - 0 - நான் வரைந்த படங்களைப் பார்ப்பவர்கள், எப்படி வரையக் கற்றுக்கொண்டேன் என்ற கேள்வியை தவறாமல் கேட்பார்கள். எங்கள் குடும்பமே கலைக்குடும்பம் என்றோ, சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய கலை ஆர்வம் என்றெல்லாம் படம் போடாமல் சிரித்து மழுப்புவேன். எல்லோரையும் போல், கிரிக்கெட், காமிக்ஸ், குச்சி ஐஸ், சினிமா போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. அம்மா மார்கழி மாதம் விடியற்காலையில் கோலம் போடும்போது, இழுத்த இழுப்புக்கு அப்பாவைப் போல கோலமும் வருவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். கோலம் போட்டு முடித்தபின் அதற்கு கலர்கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. என்ன வண்ணம் என்பதைத் தேர்ந்தெடுத்து கோலத்தில் கலர் கொடுப்பேன். “என்ன அழகா கலர் கொடுத்திருக்கான் பாருங்களேன்,” என்று அம்மா அப்பாவைக் கூப்பிட்டு காண்பிப்பாள். “பொம்மனாட்டி மாதிரி என்னடாது இது வேலை?” என்று அப்பா கண்டிக்காதது நான் செய்த அதிர

மகிழ்ச்சிக்கான கோட்பாடு!

படம்: தேசிகன் என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் ராமமூர்த்தி நகர் தாண்டிய பின், சாலைகளின் இருபுறமும் மயிற்கொன்றை மலர்களை மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் பார்க்கிறேன். இந்தச் செடி புதர் அல்லது குற்றுமரம் (Shrub) வகையைச் சார்ந்தது. ஆறு அடிக்கு மேல் வளராது. குல்முஹர் மலர் போலக் கட்சி அளித்தாலும் உற்று கவனித்தால் வித்தியாசங்களைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் Peacock Flower என்கிறார்கள். பூவைப் பார்ப்பதற்கு மயிலின் கொண்டை போல இருப்பதால் இந்தப் பெயர்க் காரணம் என்று நினைக்கிறேன். என் பையனை பள்ளிக்குக் கொண்டுவிடும் போது ஒரு வீட்டில் ஸ்டிராபெரி வண்ணத்தில் இந்த மலரைப் பார்த்தேன். ஒரே வகை மலர்களில் பல விதமான வண்ணங்களை நாம் பார்த்திருக்கலாம். ரோஜா, செம்பருத்தி, போகன்வில்லா போன்ற மலர்கள் உதாரணம். மிருகங்களுக்கும், பூக்களுக்கும் இயற்கை பலவித வண்ணங்கள் தந்திருக்கிறது. மிருகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள இயற்கையோடு ஒளிந்துக்கொள்ள இந்த வண்ணங்கள் உபயோகப்படுகிறது. ஆனால் பூக்கள் மற்றவர்களை கவர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு உபயோகப்படுத்துகின்றன. மலர்களில் இந்த நிறத்துக்குக் காரணம் மூலக்கூ

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

“கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும்  “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒதுங்கினால், டிரைவர் ஹார்ன் அடித்து, இன்ச் இன்சாக பஸ்ஸை நகர்த்தி பூச்சாண்டி காமிப்பார்.  “ஆனது ஆச்சு, இதோ வந்திடுவார்,” என்று பதறும் உங்களுக்கு வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். பதினைந்து வருடங்கள் முன் அமெரிக்கா சென்றபோது டாய்லட் பேப்பர் அறிமுகம் கிடைத்தது. காலில் நியூஸ் பேப்பர் பட்டாலே சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளும் நமக்கு, பேப்பரில் துடைத்துப் போட உடனே மனம் இடம்கொடுக்காது. ஆனாலும், ச

எலுமிச்சைச் சாறு கசக்கும்!

'கோர்ட் பிள்ளையார்' என்று அழைக்கப்படும் திருச்சி கோர்ட் பஸ்டாப்பில் இருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது அங்கே ஒரு வித வாசனை வரும். சுற்றி முற்றும் பார்த்தால் சைடில் கழுத்தளவு காந்தித் தாத்தா நேற்று தான் சுதந்திரம் வாங்கியது போல சிரித்துக்கொண்டு இருப்பார். சரி அங்கிருந்து தான் வாசனை வருகிறது என்று பக்கம் போனால் அந்த வித்தியாசமான மரத்தைப் பார்க்கலாம். மரத்தைச் சுற்றி இருபது அடிக்கு வாசனையாக இருக்கும். என்ன மாதிரி வாசனை என்று விவரிக்க முடியாது. மரத்தின் அடிப்பாகம் முழுவதும் மத்தாப்பு கொள்ளுத்திய பின் வளைந்த கம்பிகள் போல இருக்கும் காம்புகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்திருக்கும். மேலே பார்த்தால் பச்சை இலைகளுக்கு இடையில் அதே மத்தாப்பு கம்பி - நாகலிங்கப்பூ. பூவைப் பாதி பிரித்து பார்த்தால் சின்ன லிங்கம் மாதிரியும் அதற்கு மேலே நாகம் மாதிரியும் இருப்பதே இந்தப் பூவின் பெயர்க் காரணம். ரொம்ப பிரித்தால் நாகம் கையோடு வந்துவிடும். ஆங்கிலத்தில் இந்த மரத்தின் பெயர் கேனன் பால் (Cannon Ball). மரத்தின் காய்கள் உருண்டையாக பீரங்கிக் குண்டுகள் போல இருப்பதால் இந்த பெயர். இந்த குண்டு பழ

ஒரு சொட்டு வைரம்

நடைப் பயிற்சி செய்யும் போது பார்க்கும் வைரங்களில் ஒன்று தான் நீங்கள் மேலே பார்ப்பது. ஆறரை மணிக்கு மூங்கில் இலை நுனியில் ஒரு சொட்டு பனி நீர் தான் இந்த வைரம். சொல்லிவைத்தது போல் எல்லா இலை நுனியிலும் ஒரு சொட்டு இருக்கும். ஏழு மணிக்கு சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது எல்லா சொட்டும் ஜொலிக்கும். இந்த காட்சியை பார்த்தால் மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே இந்த பழைய பாடல் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எல்லா காலத்திலும் ரசிக்கும் தன்மை இருந்திருக்கிறது. அந்த காலத்தில் கேமராவுக்கு பதில் கவிதை. மூங்கில் பற்றி வரும் பாடல்களில் பெரும்பாலும் புல்லாங்குழல் வந்துவிடும். புல்லாங்குழலுடன் கிருஷ்ணரும் கூடவே வந்துவிடுவார். அதனால் மூங்கில் அழகை யாரும் அவ்வளவாக கண்டுகொண்டதில்லை. ஆழ்வார் பாடல்கள், வடக்கே சூர்தாஸ், மீரா போன்ற பக்த்தர்கள் எல்லோரும் கண்ணதாசன் மாதிரி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்று தான் பாடியிருக்கிறார்கள். எம்.எஸ். பாடிய "Kunjani Kunjani Bajati Murli" என்று தேஷ் ராகத்தில் அமைந்த சூர்தாஸ் பஜனை வாழ்கையில் ஒரு முறையாவது கேட்டுவ

தோசை

Question: Light beam is incident on a glass surface with refractive index of 0.6 and angle of refraction of 30 degree. Find the angle of incidence ? இந்த கதையை படிக்கும் முன் சில நிபந்தனைகள். முதல் நிபந்தனை நீங்கள் பிளஸ்-2 படித்திருக்க வேண்டும். இரண்டாவது நீங்கள் ப்ளஸ்-2வில் இயற்பியல் எடுத்திருக்கவேண்டும். மேலே இருக்கும் கேள்விக்கான விடையைக் கேட்கப்போவதில்லை. அப்படியே அதற்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்களிடம் மடக்கைப்பட்டியல் என்ற லாகிரதமிக் (logarithm) புத்தகம் தேவைப்படும். லாகிரதமிக் புத்தகம் ஜான் நேப்பியர் என்பவர் 1614’ம் வருஷம் கண்டுபிடித்தார். ஆனால் அவருக்கு முன்பே ஜொஸ்ட் புர்கி என்பவர் அதை கண்டுபிடித்துவிட்டார் ஆனால் அதை பற்றி யாருடமும் சொல்லாததால், அவர் பெயர் பிரபலம் ஆகவில்லை. இப்படி இந்த புத்தகத்துக்கு பின் சுவாரசியமான கதை இருக்கிறது. என்னுடைய லாகிரதமிக் புத்தகம் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. காந்தி ஜெயந்திக்கு மறு நாள் பள்ளி முதல்வரை அப்பா சந்தித்தார். பள்ளி முதல்வரை ஏன் சந்தித்தார் என்பது இன்னொரு கதை. இரண்டையும் சொல்றேன். நான் படித்த பள்ளியில் ஒழுக்கத்துக்கும், கட்ட

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்

மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும். பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம். தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும். அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட

மேல்கோட்டையில் ஒரு நாள்

மேல்கோட்டைக்குப் பல முறை சென்றிருந்தாலும், கடந்த மாதம் 25ஆம் தேதி அங்கு பிரசித்திபெற்ற ‘வைரமுடி’ உத்ஸவத்தைக் கண்டுகளித்தது மறக்க முடியாத அனுபவம். “எக்கசக்கமா கூட்டம் இருக்கும், காரை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திவிடுவார்கள்” போன்ற எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டு பெங்களூர் மைசூர் ரோட்டில், ராம் நகரத்தில் இருக்கும் ‘காமத் லோகருச்சி’ ஹோட்டலை அடைந்தபோது காலை எட்டரை மணி. தென்னை ஓலை இட்லியை சாப்பிட்டுவிட்டு மேல்கோட்டை சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி. மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது. பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் மாண்டயாவிலிரிந்து சுமார் 25 கிமீ தூரத்தில், 150 மீட்டர் உயரத்தில் உள்ள தட்டையான பகுதிதான் மேல்கோட்டை என்ற ஊர். 1991ஆம் கணக்கின் படி இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை 2685. தற்போது இதைவிட 100 பேர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம். உடல்நலத்துக்கு உகந்த இடமாகவும், வேளாண்மை நிலங்கள், நீர் நிலைகள் சூழ்ந்த, ஃபேண்டஸி கதைகளில் வர