Skip to main content

சீட்டு பெற்ற சீமாட்டி

பலர் தேடிப்படிப்பார்கள் என்ற நோக்கத்தில் நம்பிள்ளை கட்டுரையில் கடைசியில் ஒரு பெண்மணி பற்றிய கதை என்று முடித்திருந்தேன். ஆனால் அதை  எப்போது எழுதுவீர்கள் என்று பலர் கேட்பதால் அந்த சம்பவம் இங்கே. 


நம்பிள்ளை திருமாளிகை சிறியதாக இருந்தது. பலபேர் வந்து காலஷேபம் கேட்க அது சௌகரியமாக இல்லை. நம்பிள்ளையின் அகத்தையும் சேர்த்தால் பலர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் அம்மையார் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவர்.


நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம் பற்றாமல் சிறியதாக இருக்கிறது உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார்.


அதற்கு அந்த அம்மையாரோ
“கோயிலிலே(ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும் ? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.


இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார்.
நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம்  பார்த்த போது “காலஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள் உமது இடத்தைத் தரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்தார்.


“அவ்விதமே செய்கிறேன் ஆனால் தேவரீர் பரமபதத்தில் எனக்கு ஓர் இடம் தந்தருள வேண்டும்” என்று பதில் கோரிக்கை வைத்தார் அந்த அம்மையார்.


”நான் எப்படிக் கொடுக்க முடியும் ? அதை வைகுண்ட நாதனன்றோ தந்தருள வேண்டும்” என்றார்.
“தேவரீர் பெருமாளிடம் சிபாரிசு செய்து விண்ணப்பம் செய்யலாமே” என்றார்
“சரி செய்கிறேன்” என்றார் நம்பிள்ளை ஆச்சரியத்துடன்.
“ஸ்வாமி, அடியேன் ஒன்றும் தெரியாத சாது, பெண்பிள்ளை வேறு அதனால் சும்மா தருகிறோம் என்றால் போதாது. எழுதித் தந்திடும்” என்றாள்
நம்பிள்ளை மேலும் ஆச்சரியப்பட்டு ஒரு ஓலையை எடுத்து
”அகில ஜகத் ஸ்வாமியும் அஸ்மத் ஸ்வாமியுமான ஸ்ரீவைகுண்டநாதன் இவ்விமையாருக்கு பரமபதத்தில் ஓர் இடத்தை தந்தருள வேண்டும் இப்படிக்கு ,
திருக்கலிகன்றி தாஸன்,
தேதி, மாதம், வருடம்”
என்று எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்தார்.
அந்தச் சீட்டு பத்திரத்தைப் பெற்று சிரஸில் வைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டா.
தம் இருப்பிடத்தை உடனே கொடுத்துவிட்டார்.
சீட்டைப் பெற்ற அவ்வம்மையார் மூன்றாம் நாள் திருநாடு அடைந்தார்.

Comments